வாணியம்பாடி தொகுதியில் 3 ஆயிரம் மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள் - அமைச்சர் நிலோபர் கபில் வழங்கினார்

வாணியம்பாடி தொகுதியில் 3 ஆயிரம் மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்களை அமைச்சர் நிலோபர் கபில் வழங்கினார்.

Update: 2021-01-01 12:00 GMT
வாணியம்பாடி, 

வாணியம்பாடி-நியூடவுன் பகுதியில் உள்ள நகராட்சி மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் அரசு மற்றும் அரசு நிதியுதவி பெரும் 7 பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கும் விழா நடைபெற்றது. கலெக்டர் சிவன்அருள் தலைமை தாங்கினார். வாணியம்பாடி வருவாய் கோட்டாட்சியர் காயத்ரி சுப்பிரமணி, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் எஸ்.மார்ஸ், முன்னாள் எம்.எல்.ஏ. சம்பத்குமார், நகர கூட்டுறவு வங்கி இயக்குனர் சதாசிவம், மாநில மதிப்பிட்டு குழு உறுப்பினர்ஜி.செந்தில்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட கல்வி அலுவலர் முனிமதன் வரவேற்றார்.

சிறப்பு அழைப்பாளராக அமைச்சர் நிலோபர் கபில் கலந்துகொண்டு வாணியம்பாடி நகரம், உதயேந்திரம் மற்றும் தும்பேரி ஆகிய பகுதிகளில் இயங்கி வரும் அரசு மற்றும் அரசு நிதியுதவி பெரும் 7 பள்ளிகளில் பிளஸ்-1 படிக்கும் 1,732 மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்களை வழங்கி பேசினார்.

இதே போல் வள்ளிப்பட்டு, நிம்மியம்பட்டு மற்றும் வெள்ளக்குட்டை அரசு மேல்நிலைப்பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கும் விழா வள்ளிப்பட்டு அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. முன்னாள் மாவட்ட குழு உறுப்பினர் கே.பி.ஜெயசக்தி முன்னிலை வகித்தார்.

சிறப்பு அழைப்பாளராக அமைச்சர் நிலோபர் கபில் கலந்துகொண்டு, பிளஸ்-1 படிக்கும் 383 மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள்களை வழங்கினார்.

ஆலங்காயம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடந்த விழாவில் அமைச்சர் நிலோபர் கபில் கலந்துகொண்டு மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா ைசக்கிள்களை வழங்கினார்.

வாணியம்பாடி தொகுதியில் மொத்தம் 3,031 மாணவ - மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்கள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சிகளில் வாணியம்பாடி தாசில்தார் சிவப்பிரகாசம், பேரூராட்சி செயலாளர் பி.கே.மணி, செயல் அலுவலர் கணேஷ், முன்னாள் பேரூராட்சி தலைவர்கள் மஞ்சுளா கந்தன், டி.பாண்டியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்