தஞ்சை மகளிர் தையல் தொழில் கூட்டுறவு சங்கத்தில் பெண்கள் உள்ளிருப்பு போராட்டம் அதிகாரிகள் பேச்சுவார்த்தை

தஞ்சை மகளிர் தையல் தொழில் கூட்டுறவு சங்கத்தில் பெண்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து அவர்களுடன் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.

Update: 2021-01-01 04:42 GMT
தஞ்சாவூர்,

தஞ்சை மகர்நோன்புச்சாவடி பகுதியில் மகளிர் தையல் தொழில் கூட்டுறவு சங்க அலுவலகம் உள்ளது. இந்த கூட்டுறவு சங்கத்தில் 1,500-க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் உள்ளனர். இதன் தலைவராக மைசூர்மணி, துணைத்தலைவராக சாந்தி, இயக்குனர்களாக வித்யா, செல்வராணி, ஜனகா, அன்பழகி ஆகியோர் உள்ளனர்.

இந்த நிலையில் நேற்று காலை 11 மணிக்கு கூட்டுறவு சங்கத்திற்கு தலைவர் உள்ளிட்ட நிர்வாகிகள் என 50-க்கும் மேற்பட்டவர்கள் வந்தனர். அவர்கள் தையல் தொழில் கூட்டுறவு சங்கத்தின் பேரவை கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை மேலாண்மை இயக்குனரிடம் கொடுத்தும், அவர் அதை மேலிடத்துக்கு அனுப்பாமல் வைத்து விட்டார் எனக்கூறி உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

உள்ளிருப்பு போராட்டம்

இது குறித்து போராட்டத்தில் ஈடுபட்ட நிர்வாகிகள் கூறுகையில், பேரவை கூட்டம் கடந்த 4 ஆண்டுகளாக கூட்டப்படாமல் இருந்தது. இந்த நிலையில் கடந்த 29-ந்தேதி கூட்டம் நடத்தப்பட்டது. கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை அங்கீகரித்து மேலிடத்துக்கு அனுப்பாமல் வைத்து விட்டார். இதனால் நாங்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபடுகிறோம்’’என்றனர்.

மதியம் 3 மணி மணி வரை இந்த போராட்டம் நீடித்தது. இதையடுத்து அங்கு தஞ்சை நகர கிழக்கு போலீசாரும் வந்தனர். இதையடுத்து கூட்டுறவு சங்க தலைவர் மற்றும் நிர்வாகிகளிடம், மேலாண்மை இயக்குனர் சரவணன் மற்றும் மற்றொரு கூட்டுறவு சங்க தலைவி கவிதாகலியமூர்த்தி மற்றும் கூட்டுறவு சங்க அதிகாரிகள் பேச்சுவார்த்தை வந்து நடத்தினர்.

பணப்பலன்கள்

அப்போது கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் முறையாக அங்கீரிக்கப்படும் என்றும், உறுப்பினர்களுக்கு கிடைக்க வேண்டிய பணப்பலன்கள் முறையாக கிடைக்கும். பணப்பலன்கள் வழங்கும் போது அனைத்து உறுப்பினர்களையும் வரவழைத்து, கையெழுத்து பெறப்பட்டு வழங்கப்படும் என்று தெரிவித்தனர். இதையடுத்து அவர்கள் சமாதானம் அடைந்தனர். அதன் பின்னர் போராட்டம் கைவிடப்பட்டது.

மேலும் செய்திகள்