மயிலாடுதுறையில் பூட்டிக்கிடந்த வீட்டில் திருட முயற்சி மர்ம நபர்களுக்கு போலீசார் வலைவீச்சு

மயிலாடுதுறையில் பூட்டிக்கிடந்த வீட்டில் திருட முயற்சி நடந்துள்ளது. இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.

Update: 2021-01-01 04:30 GMT
மயிலாடுதுறை,

மயிலாடுதுறை காவிரி நகரை சேர்ந்தவர் பாஸ்கர் மகன் நாராயணன் (வயது 30). இவர், மயிலாடுதுறையில் ஓட்டல் நடத்தி வருகிறார். கடந்த இரண்டு வாரத்திற்கு முன்பு நாராயணன் தனது வீட்டை பூட்டி விட்டு குடும்பத்தினருடன், சென்னையில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றார். அப்போது நாராயணன் தனது வீட்டின் சாவியை உறவினரான கூறை நாட்டில் வசிக்கும் கிருஷ்ணன் என்பவரிடம் கொடுத்து விட்டு சென்றார். இந்த நிலையில் நேற்று முன்தினம் கிருஷ்ணன், காவிரி நகரில் உள்ள நாராயணன் வீட்டுக்கு வந்தார்.

கொள்ளை முயற்சி

அப்போது வீட்டின் முன்பக்க கதவில் பூட்டி இருந்த பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து இருந்ததைக்கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து நாராயணனுக்கு, கிருஷ்ணன் தகவல் அளித்தார். மேலும் மயிலாடுதுறை போலீசாரிடமும் தகவல் தெரிவித்தார்.

தகவலின் பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினர். விசாரணையில் நாராயணன் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்று பீரோவை உடைத்த மர்ம நபர்கள் அங்கு எதுவும் திருட முடியாமல் அப்படியே விட்டு விட்டு சென்றது தெரிய வந்தது.

தேடி வருகிறார்கள்

இந்த சம்பவம் தொடர்பாக நாராயணன் கொடுத்த புகாரின் பேரில் மயிலாடுதுறை போலீசார் வழக்கு பதிவு செய்து வீட்டின் பூட்டை உடைத்து திருட முயற்சி செய்த மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்