கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கு மத்தியில் புதுச்சேரியில் களை கட்டிய புத்தாண்டு கொண்டாட்டம்
கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கு மத்தியில் புதுச்சேரியில் புத்தாண்டு கொண்டாட்டம் களை கட்டியது. வெளியூர்காரர்கள் குவிந்ததால் நகரில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
புதுச்சேரி,
புதுச்சேரியில் ஆண்டுதோறும் ஆங்கில புத்தாண்டு வெகு விமரிசையாக கொண்டாடப்படும்.
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக தற்போது தமிழகம், கர்நாடகாவில் புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் புதுச்சேரியில் மத்திய அரசின் வழிகாட்டுதலை பின்பற்றி புத்தாண்டை கொண்டாடுவதற்கு அரசு அனுமதி அளித்தது. ஓட்டல், தங்கும் விடுதிகளில் கேளிக்கை நிகழ்ச்சிகளுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை.
ஆனாலும் புத்தாண்டு பாதுகாப்பு ஏற்பாடுகளை போலீஸ் தீவிரப்படுத்தி உள்ளது. கடற்கரையில் விதிமீறல்கள் ஏற்படாத வகையில் அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு இருந்தன.
அதன்படி பொதுமக்கள் அதிகம் கூடுவதை கட்டுப் படுத்தும் வகையில் புதுவை நகருக்குள் நுழையும் அனைத்து முக்கிய சந்திப்புகளிலும் தடுப்பு கட்டைகள் அமைத்து தீவிர சோதனைக்குப் பிறகே வாகனங்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றன.
இதன் காரணமாக அனைத்து சந்திப்புகளிலும் நேற்று காலை முதல் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. வாகனங்கள் நீண்ட தூரம் அணிவகுத்து நின்றன. ஒரு சில இடங்களில் அமைக்கப்பட்ட தடுப்புக் கட்டைகள் போக்குவரத்திற்கு கடும் இடையூறாக இருந்ததால் அந்த தடுப்புகள் அகற்றப்பட்டன. ஒயிட் டவுண் பகுதியில் வசிப்பவர்களுக்கும், ஓட்டல்களில் தங்கியிருக்கும் சுற்றுலா பயணிகளுக்கும் தனியாக வாகன பாஸ்கள் வழங்கப்பட்டன.
புதுவை நகர் மற்றும் கடற்கரை சாலைக்கு செல்லும் பிரதான சாலைகள் நேற்று மாலை 5 மணிக்கு மேல் மூடப்பட்டன. இதனால் போலீசாருடன் ஆங்காங்கே வாகன ஓட்டிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். போலீசாரின் கடும் கெடுபிடி காரணமாக சுற்றுலா பயணிகள் மற்றும் உள்ளூர் வாசிகள் பெரும் சிரமத்திற்கு ஆளானார்கள்.
கடற்கரைக்கு செல்ல 10 நுழைவாயில்கள் அமைக்கப்பட்டு அதன் வழியாக மட்டும் மக்கள் அனுமதிக்கப்பட்டனர். அவர்களுக்கு உடல்வெப்ப பரிசோதனை மற்றும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. புதுவை ஒயிட் டவுண், கடற்கரை சாலைகளில் போலீசார் கண்காணிப்பு கேமரா மற்றும் ஆளில்லா குட்டி விமானம் மூலம் கண்காணித்தனர்.
முன்னதாக முதல்-அமைச்சர் நாராயணசாமி, சபாநாயகர் சிவக்கொழுந்து ஆகியோர் போலீஸ் டி.ஜி.பி. பாலாஜி ஸ்ரீவஸ்தவா மற்றும் போலீஸ் அதிகாரிகளுடன் கடற்கரையில் செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகளை பார்வையிட்டனர்.
இந்தநிலையில் வெளியூர் மற்றும் வெளி நாடுகளில் இருந்து கார் மற்றும் இருசக்கர வாகனங்களில் சுற்றுலா பயணிகள் புதுச்சேரிக்கு படையெடுத்தனர். புதுச்சேரி - விழுப்புரம் சாலையில் மாநில எல்லையான மதகடிப்பட்டு முத்தமிழ் நுழைவாயிலில் திருபுவனை போலீஸ் இன்ஸ்பெக்டர் கணேசன் தலைமையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். வெளியூர்களில் இருந்து வந்தவர்களுக்கு உடல் வெப்ப பரிசோதனையும் நடத்தப்பட்டது.
அப்போது அணிவகுத்து வந்த வாகனங்களால் பரிசோதனை செய்ய முடியாமல் போலீசார் திணறினர். இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. திருபுவனை சப்-இன்ஸ்பெக்டர் அஜய்குமார், உதவி சப்-இன்ஸ்பெக்டர்கள் மற்றும் போலீசார் வாகனங்களை ஒழுங்குப்படுத்தினர்.
புதுச்சேரி - கடலூர் சாலையில் முன்னோைட நுழைவாயில் பகுதியில் கிருமாம்பாக்கம் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். வாகனங்களில் வந்தவர்களுக்கு உடல்வெப்ப பரிசோதனை செய்த பின்னர் புதுவைக்குள் அனுமதித்தனர். இருசக்கர வாகனங்களில் தலைகவசம் அணியாமல் வந்தவர்களை எச்சரித்து திருப்பி அனுப்பினர். அனைவரும் முககவசம் அணிந்து செல்ல அறிவுறுத்தினர். ரெட்டிச்சாவடி சோதனை சாவடியில் தமிழக போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். இதேபோல் கிழக்கு கடற்கரை சாலையில் சென்னையில் இருந்து வந்த வாகனங்களை காலாப்பட்டு நுழைவாயிலிலும் போலீசார் சோதனைக்கு பின் அனுமதித்தனர்.
அண்டை மாநிலங்களில் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் புதுச்சேரி அரசால் அனுமதி அளிக்கப்பட்டதையொட்டி சுற்றுலா பயணிகளின் வருகையால் புத்தாண்டு கொண்டாட்டம் களை கட்டியது.