வாஷியில் குழாய் உடைந்து கியாஸ் கசிந்ததால் பதற்றம்

வாஷியில் குழாயில் ஏற்பட்ட உடைப்பால் கியாஸ் கசிந்தது.

Update: 2021-01-01 01:40 GMT
மும்பை,

நவிமும்பை வாஷி பகுதியில் உள்ள நெடுஞ்சாலை அருகே சாலை பணிக்காக பொக்லைன் எந்திரம் மூலம் குழிதோண்டும் பணி நேற்று நடந்தது. அப்போது, அந்த பகுதியில் பூமிக்கடியில் பதிக்கப்பட்டு இருந்த கியாஸ் பைப்லைனில் சேதம் ஏற்பட்டது. இதன் காரணமாக கியாஸ் கசிந்து காற்றில் பரவியது.

இதனால் ஏற்பட்ட தூர்நாற்றம் காரணமாக அங்கிருந்தவர்களுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது. எனவே பாதுகாப்பு கருதி அந்த சாலையில் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டது. உடனடியாக சம்பவம் குறித்து தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதன்பேரில் தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தண்ணீரை பீய்ச்சி அடித்து அந்த பகுதியில் தீப்பிடிக்காதவாறு குளிர்வித்தனர்.

இதற்கிடையே கியாஸ் கசிவு பற்றி தகவல் அறிந்த கியாஸ் நிறுவன ஊழியர்களும் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். அவர்கள் அந்த குழாயில் சென்ற கியாஸ் இணைப்பை மதியம் 12.45 மணி அளவில் துண்டித்தனர். இதையடுத்து குழாயில் ஏற்பட்ட உடைப்பை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டனர்.

மாலை 4.30 மணி அளவில் உடைப்பு சரிசெய்யப்பட்டு மீண்டும் கியாஸ் வினியோகம் தொடங்கப்பட்டது. இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்