எச்சரிக்கையாக இருக்க வேண்டும் கொரோனா இன்னும் நம்மை விட்டு விலகவில்லை சுகாதாரத்துறை மந்திரி சுதாகர் பேட்டி

கொரோனா இன்னும் நம்மை விட்டு விலகவில்லை என்றும், எனவே எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும் சுகாதாரத்துறை மந்திரி சுதாகர் கூறினார்.

Update: 2021-01-01 00:56 GMT
பெங்களூரு, 

மாநில சுகாதாரத்துறை மந்திரி சுதாகர் பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

கர்நாடகத்தில் புதிய வகை கொரோனா வைரஸ் பரவி வருகிறது. இந்த சூழ்நிலையில் நாம் இன்று (நேற்று) இரவு புத்தாண்டில் காலடி எடுத்து வைக்கிறோம். யாரும் புத்தாண்டை கூடி கொண்டாட வேண்டாம். அவரவர் வீடுகளில் எளிமையாக கொண்டாடுங்கள். இந்த புதிய கொரோனா மிக வேகமாக பரவும் தன்மை கொண்டது. இந்த விவகாரத்தில் நாம் அனைவரும் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். கொரோனா இன்னும் நம்மை விட்டு விலகவில்லை. தடுப்பூசி போட்டுக்கொள்ளும் வரை எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

இங்கிலாந்தில் இருந்து கர்நாடகம் வந்தவர்களில் இதுவரை 34 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களுடன் தொடர்பில் இருந்த 4 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. அந்த 34 பேருக்கும் ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர்கள் நன்றாக உள்ளனர். அவர்களிடம் நோயின் தீவிரம் இல்லை. புதிய கொரோனா பாதிப்பு பெங்களூருவில் 3 பேருக்கும், சிவமொக்காவில் 4 பேருக்கும் ஏற்பட்டுள்ளது. இங்கிலாந்தில் இருந்து கர்நாடகம் வந்தவர்களில் 199 பேர் தலைமறைவாக உள்ளனர். அவர்களை கண்டுபிடிக்கும் பணிகளை போலீசார் மேற்கொண்டு வருகிறார்கள்.

அதில் 80 பேர் நமது நாட்டை சேர்ந்தவர்கள் அல்ல. இரவு நேர ஊரடங்கு பற்றி பேச வேண்டியது இல்லை. இரவு நேர ஊரடங்கை அமல்படுத்துமாறு நான் மற்றும் வருவாய்த்துறை மந்திரி ஆர்.அசோக் ஆகியோர் கூறினோம். இதில் எந்த குழப்பமும் இல்லை. கொரோனா தடுப்பு தொழில்நுட்ப ஆலோசனை குழுவும், இரவு நேர ஊரடங்கை அமல்படுத்துமாறு பரிந்துரை செய்தது. ஆனால் எதிர்க்கட்சிகள் உள்பட சிலர் இரவு நேர ஊரடங்கிற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். அதனால் இரவு நேர ஊரடங்கை வாபஸ் பெற்றோம்.

புதிய கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டால், அத்தகையவர்களின் வீடு மற்றும் கட்டிடம் சீல் வைக்கப்படும். ஏனென்றால் புதிய கொரோனா வேகமாக பரவும். அரசு தனது உத்தரவை மாற்றினால் அது குழப்பம் என்று சொல்வது சரியல்ல. மக்களின் நலனுக்கு எது நல்லதோ அதை அரசு மேற்கொள்கிறது. இதில் குழப்பம் என்ற பேச்சுக்கே இடமில்லை. சுகாதாரத்துறை, முதல்-மந்திரி மற்றும் போலீஸ் துறைக்கு அவ்வப்போது ஆலோசனைகளை கூறுகிறது. இவ்வாறு மந்திரி சுதாகர் கூறினார்.

மேலும் செய்திகள்