சவுதி அரேபியாவில் இருந்து சென்னைக்கு பேரிச்சம் பழத்துக்கு நடுவில் மறைத்து ரூ.15 லட்சம் தங்கம் கடத்தல்
சவுதி அரேபியாவில் இருந்து சென்னைக்கு பேரிச்சம் பழத்துக்கு நடுவில் மறைத்து வைத்து கடத்திய ரூ.15 லட்சத்து 26 ஆயிரம் மதிப்புள்ள தங்கத்தை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
சவுதி அரேபியா விமானம்
சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்துக்கு வரும் சிறப்பு விமானத்தில் பெரும் அளவில் தங்கம் கடத்தி வரப்படுவதாக விமான நிலைய சுங்க இலாகா கமிஷனர் ராஜன் சவுத்ரிக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அவரது உத்தரவின்பேரில் சுங்க இலாகா அதிகாரிகள் சிறப்பு விமானத்தில் வந்த பயணிகளை கண்காணித்தனர்.
அப்போது ஏற்கனவே சவுதி அரேபியாவில் இருந்து சென்னை வந்த பயணி ஒருவரின் உடைமைகள் வந்திருந்தன. அவற்றை சுங்க இலாகா அதிகாரிகள் பிரித்து பார்த்தபோது பேரிச்சம் பழம் பெட்டிகள் இருந்தன.
ரூ.15 லட்சம் தங்கம்
அவற்றின் மீது சந்தேகம் அடைந்த சுங்க இலாகா அதிகாரிகள், அதில் ஒரு பாக்கெட்டை எடுத்து பிரித்து பார்த்தனர். அதில் பேரிச்சம் பழங்களுக்கு நடுவே தங்க கட்டிகளை மறைத்து வைத்து கடத்தி வந்ததை கண்டுபிடித்தனர்.
ரூ.15 லட்சத்து 26 ஆயிரம் மதிப்புள்ள 300 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்த சுங்க இலாகா அதிகாரிகள், இது தொடர்பாக மேலும் விசாரித்து வருகின்றனர்.