வடநெம்மேலி முதலை பண்ணையில் இருந்த அரிய வகை ஆமை சர்வதேச விலங்கு கடத்தும் கும்பலால் கடத்தப்பட்டதா?; கண்காணிப்பு கேமரா காட்சி பதிவு மூலம் போலீசார் விசாரணை

வடநெம்மேலி முதலை பண்ணையில் இருந்து கடத்தப்பட்ட அரிய வகை வெளிநாட்டு ஆமையை சர்வதேச விலங்கு கடத்தும் கும்பல் கடத்தியதா? என்பது குறித்து கண்காணிப்பு கேமரா காட்சி பதிவு மூலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2020-12-31 22:39 GMT
கடத்தப்பட்ட ஆமை
முதலை பண்ணை
செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரம் அடுத்த கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள வடநெம்மேலி முதலை பண்ணையில் பார்வையாளர்கள் கண்டுகளிப்பதற்காக 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட முதலைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன.

அங்குள்ள ஒரு பகுதியில் தேசிய அளவில் பாம்பு விஷம் எடுக்கும் பண்ணையும், மறுபுறம் இந்த பண்ணையின் முகப்பு வாயில் பகுதியில் கம்பி வேலி அடைக்கப்பட்ட ஒரு பகுதியில் அல்டாப்ரா என்ற அரிய வகையை சேர்ந்த 4 வெளிநாட்டு ஆமைகள் பராமரிக்கப்பட்டும் வந்தன.

இந்த ஆமைகள் ஐஸ்லாந்து நாட்டு அருகில் உள்ள காலபாக்சஸ் தீவில் உள்ள நிலப்பரப்பு பகுதிகளில் வாழ்ந்து வருபவை ஆகும். 1½ மீட்டர் நீளம் வரை வளரும் தன்மை கொண்ட இந்த ஆமைகள் 225 கிலோ எடை வரை வளரும். 152 ஆண்டுகள் வரை வாழும் தன்மை உடையவை.

அரிய வகை ஆமை திருட்டு
இந்த அரிய வகையை சேர்ந்த 4 ஆமைகளில் பெரிய ஆமை ஒன்று கடந்த சிலநாட்களுக்கு முன்பு இரவு நேரத்தில் திருடப்பட்டு விட்டது. ரூ.15 லட்சம் மதிப்புள்ள 100 கிலோ எடையுள்ள இந்த அரிய வகை ஆமையை திருடிச்சென்ற மர்ம கும்பல் பற்றி விசாரிக்க மாமல்லபுரம் உதவி போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவதனம் மேற்பார்வையில் மாமல்லபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் வடிவேல்முருகன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

அதிக விலை மதிப்புள்ள இந்த ஆமையை திருடி சென்ற கும்பல் சர்வதேச அளவில் விலங்குகளை கடத்தி வணிகம் செய்யும் கும்பலை சேர்ந்தவர்களாக இருக்கலாம் என்ற கோணத்திலும், இங்கு பணிபுரியும் ஊழியர்களின் துணையுடன் யாராவது இதனை கடத்தி சென்றனரா? என்ற கோணத்திலும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

கடத்தல் கும்பல் ஆமையை கடத்தும்போது அதன் வாயை கட்டி கடத்தி இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

24 மணி நேர கண்காணிப்பு
தற்போது இந்த முதலை பண்ணையில் உள்ள முதலைகள், பாம்புகள், ராட்சத உடும்பு போன்றவற்றை கடத்தல் கும்பல் கடத்தும் வாய்ப்பு உள்ளதால் முதலை பண்ணையில் 24 மணி நேரமும் கண்காணிப்புடன் கூடிய பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த பண்ணையில் எஞ்சியுள்ள 3 ஆமைகளும் ஊழியர்களின் கண்காணிப்பில் தீவிர பாதுகாப்பில் இருந்து வருகின்றன. கடத்தல் கும்பல் பற்றி ஏதாவது துப்பு கிடைக்கிறதா? என்று தனிப்படை போலீசார் கிழக்கு கடற்கரை சாலையில் ஒவ்வொரு பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவு காட்சிகளை அலசி ஆராய்ந்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்