வெள்ளகோவிலில் கொடூர சம்பவம்: மகனுக்கு வாரிசு வேண்டி பரிகார பூஜை செய்தபோது பெண் வெட்டிக்கொலை-கணவர் படுகாயம் - நகை-பணத்துடன் மந்திரவாதி ஓட்டம்

வெள்ளகோவிலில் மகனுக்கு வாரிசு இல்லை என்பதற்காக பரிகார பூஜை செய்த போது பெண்ணை அரிவாளால் வெட்டிக்கொலை செய்துவிட்டு, அவரது கணவரையும் வெட்டிவிட்டு பணம் மற்றும் நகையுடன் தப்பி ஓடிய மந்திரவாதியை போலீசார் தேடிவருகிறார்கள். இது பற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவத

Update: 2020-12-31 18:08 GMT
வெள்ளகோவில்,

திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் அருகே உள்ள அகலரபாளையம் புதூரை சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது 60). இவருடைய மனைவி ஈஸ்வரி (55). இவர்கள் வெள்ளகோவில்-மூலனூர் ரோட்டில் வசித்து வந்தனர். செம்மாண்டம்பாளையம் பிரிவு அருகே கடந்த 7 ஆண்டாக ஆறுமுகம் பர்னிச்சர் கடை வைத்து நடத்தி வருகிறார்.

இவர்களுடைய மகன் உதயகுமார் (35). இவருடைய மனைவி செல்வராணி (34). உதயகுமார் தனது மனைவியுடன் பல்லடம் அருகே உள்ள சுல்தான்பேட்டையில் வசித்தபடி நிதிநிறுவனம் நடத்தி வருகிறார். உதயகுமாருக்கும், செல்வராணிக்கும் திருமணமாகி 12 ஆண்டுகள் ஆகிறது. இதுவரை குழந்தை இல்லை.

இந்த நிலையில் தங்களது மகனுக்கு வாரிசு இல்லையே என்ற மன வருத்தத்தில் உதயகுமாரின் பெற்றோர் இருந்து வந்தனர். அதனால் மகனுக்கு வாரிசு கிடைக்க வேண்டி பல்வேறு கோவில்களுக்கு சென்று பரிகாரம் செய்தனர். ஆனாலும் குழந்தையில்லை. இதற்கிடையில் ஆறுமுகத்தின் பர்னிச்சர் கடையில் வாடிக்கையாளர்கள் வாங்கும் பொருட்களை, அவரவர் வீடுகளுக்கு வெள்ளகோவில் திருவள்ளுவர் நகரை சேர்ந்த சக்திவேல் தனது சரக்கு ஆட்டோவில் கொண்டு சென்று கொடுத்து வந்தார். இதனால் பர்னிச்சர் கடை உரிமையாளர் ஆறுமுகத்துக்கும், ஆட்டோ ஓட்டுனர் சக்திவேலுக்கும் இடையே கடந்த ஒரு ஆண்டாக பழக்கம் இருந்து வந்தது. இதனால் ஆறுமுகம் தனது குடும்ப விவரங்களை அவ்வப்போது சக்திவேலிடம் கூறிவந்தார். மேலும் தனது மகன் உதயகுமாருக்கு குழந்தை இல்லாததையும், அதற்காக கோவில் கோவிலாக சென்று வருவதாகவும், குழந்தைக்காக பரிகாரம் செய்யவும் தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளனர்.

அப்போது சக்திவேல் “நான் ஆட்டோ ஓட்டுவதுடன் மந்திரவாதமும் செய்வேன். பரிகார பூஜைகளும் செய்வது உண்டு, பலருக்கு பரிகார பூஜை செய்ததில் அவர்கள் பலன் அடைந்துள்ளார்கள்.எனவே உங்கள் கடையில் ஒரு பரிகார பூஜை செய்தால் நல்லது நடக்கும்” என்று ஆசை வார்த்தை கூறியுள்ளார்.

எவ்வளவு செலவு ஆனாலும் பரவாயில்லை, தனது மகனுக்கு வாரிசு கிடைத்தால் போதும் என்ற நம்பிக்கையில் சக்திவேலை பரிகார பூஜை செய்யுமாறு ஆறுமுகம் கூறினர். இதையடுத்து பர்னிச்சர் கடையில் 30-ந் தேதி (நேற்று) பரிகார பூஜை நடத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி நேற்று அதிகாலையில் ஈஸ்வரியும், ஆறுமுகமும் தங்களது பர்னிச்சர் கடைக்கு வந்தனர். அவர்களை தொடர்ந்து பரிகாரம் செய்வதற்காக சக்திவேலும் வந்தார். இதற்கிடையே ஈஸ்வரி தனது மருமகள் செல்வராணியை காலை 5 மணிக்கு செல்போனில் தொடர்பு கொண்டு, “ஆருத்ரா தரிசனத்திற்கு அருகில் உள்ள கோவிலுக்குச் சென்று வாருங்கள்” என்று கூறினார்.

அதன் பின்னர் ஆறுமுகத்தையும், ஈஸ்வரியையும் வைத்து சக்திவேல் பரிகார பூஜை நடத்தினர். அப்போது கடையின் ஷட்டரை கீழே இழுத்துவிட்டு இருந்தனர். பூஜை முடிந்ததும் தம்பதியை விழுந்து கும்பிடும்படி சக்திவேல் கூறினார். அதன்படி இருவரும் குனிந்தனர். அப்போது சக்திவேல் தான் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து ஆறுமுகம் மற்றும் ஈஸ்வரியை சரமாரியாக வெட்டினார். இதனால் ஈஸ்வரிக்கு தலையின் இடது பக்கமும், பின் தலையிலும், நெற்றியிலும் பலத்த காயம் ஏற்பட்டது. இதில் ரத்தவெள்ளத்தில் சரிந்து விழுந்த ஈஸ்வரி சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தார். ஆறுமுகத்துக்கு நெற்றியில் வெட்டு காயம் ஏற்பட்டது.

அதை தொடர்து அவசர அவசரமாக ஈஸ்வரியின் கழுத்தில் கிடந்த 5 பவுன் தாலிக்கொடியையும், கடையில் இருந்த ரூ.10 ஆயிரத்தையும் எடுத்துக்கொண்ட சக்திவேல் கடையின் ‌‌ஷட்டரை இழுத்து மூடிவிட்டு, வெளியில் பூட்டிவிட்டு அங்கிருந்து தப்பிஓடி விட்டார். அதேநேரம் ஈஸ்வரியின் காதில் இருந்த தோடுகள் மற்றும் கையிலிருந்த கவரிங் வளையல் திருட்டு போகவில்லை.

இதற்கிடையே ரத்த வெள்ளத்தில் மிதந்த ஆறுமுகம், மெதுவாக தவழ்ந்து, தவழ்ந்து வந்து, கடையின் ‌‌ஷட்டரை வேகமாக தட்டினார். காலை நேரம் பர்னிச்சர் கடையின் உள்ளே இருந்து ஷட்டரை தட்டும் சத்தம் கேட்கிறதே என்று அதிர்ச்சியயடைந்த எதிரில் இருந்த கடைக்காரர் நந்தகுமார் என்பவர் வந்து பார்த்தார்.

அப்போது கடையின் உள்ளே இருந்து அபயக்குரல் கேட்டது. உடனே நந்தகுமார் தனது பக்கத்து கடையை சேர்ந்த செல்லமுத்து என்பவருக்கு செல்போன் மூலம் தகவல் கொடுத்தார். உடனே செல்லமுத்து அங்கு வந்தார். பின்னர் இவர்கள் இருவரும் சேர்ந்து கடையின் பூட்டை உடைத்து திறந்து பார்த்தனர். அப்போது ஈஸ்வரி ரத்தவெள்ளத்தில் பிணமாக கிடந்ததை பார்த்து அதிர்ச்சியில் உறைந்து போயினர். ஆறுமுகம் ரத்த காயத்துடன் துடித்துக்கொண்டிருந்தார். கடை முழுவதும் ரத்தக்கறையாக இருந்தது.

உடனே இதுகுறித்து வெள்ளகோவில் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் காங்கேயம் துணை போலீஸ் சூப்பிரண்டு தனராசு, வெள்ளகோவில் போலீஸ் இன்ஸ்பெக்டர் பார்த்திபன், காங்கேயம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிகண்டன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.

பின்னர் அங்கு கொடூர கொலை செய்யப்பட்டு ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்த ஈஸ்வரியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். வெட்டுக்காயம் அடைந்த ஆறுமுகத்தை மீட்டு காங்கேயம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். அங்கு அவர் முதலுதவி சிகிச்சை பெற்றார். பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டார்.

இதைத்தொடர்ந்து மோப்ப நாய் மற்றும் தடய அறிவியல் துறை, கைரேகை நிபுணர்களுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன் பேரில் திருப்பூரிலிருந்து போலீஸ் மோப்பநாய் அர்ஜுன் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டது. அது சம்பவ இடத்திலிருந்து மோப்பம் பிடித்தபடி கோவை ரோட்டில் கடைவீதி வரை சென்று அதன் பின்னர் திருவள்ளுவர் நகர் செல்லும் ரோட்டின் அருகே சென்று நின்று விட்டது. ஆனால் யாரையும் கவ்விப்பிடிக்கவில்லை.

கைரேகை பிரிவு துணைபோலீஸ் சூப்பிரண்டு சுப்பிரமணி வந்து சம்பவ இடத்தில் கைரேகையை பதிவு செய்தார். திருப்பூர் தடய அறிவியல் நிபுணர் ஸ்ரீதர் வந்து சம்பவ இடத்தில் தடயங்களை சேகரித்தார்.

மேலும் இந்த சம்பவம் தொடர்பாக வெள்ளகோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து நடந்த விபரம் குறித்து ஆறுமுகத்திடம் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் நடந்த விவரம் அனைத்தையும் போலீசாரிடம் ஆறுமுகம் தெரிவித்தார். இதையடுத்து சக்திவேலை தேடி போலீசார் திருவள்ளுவர் நகர் சென்றனர். அங்கு அவரை காணவில்லை. சக்திவேல்

நகை, பணத்துடன் தலைமறைவாகி இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் தேடிவருகிறார்கள். வாரிசு கிடைப்பதற்காக பரிகார பூஜை செய்யும்போது, பெண்ணை மந்திரவாதி கொலை செய்த சம்பவம் வெள்ளகோவில் பகுதியில் பெரும் சோகத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்