‘‘பொய் பிரசாரத்தால் ஆட்சிக்கு வர துடிக்கும் தி.மு.க.வுக்கு தக்கபாடம் புகட்டவேண்டும்’’ - நாமக்கல் பிரசாரத்தில் எடப்பாடி பழனிசாமி பேச்சு

‘‘பொய் பிரசாரத்தின் மூலம் ஆட்சிக்கு வர துடிக்கும் தி.மு.க.வுக்கு தக்கபாடம் புகட்டவேண்டும்’’ என்றும் நாமக்கல் பிரசாரத்தின்போது எடப்பாடி பழனிசாமி பேசினார்.

Update: 2020-12-31 17:22 GMT
நாமக்கல்,

நாமக்கல் மாவட்டத்தில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்ட தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சேந்தமங்கலத்தில் கொல்லிமலை மலைவாழ் மக்களுடனான கலந்துரையாடல் நிகழ்ச்சியில் நேற்று கலந்துகொண்டார். அந்த நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:-

இன்றைக்கு கொல்லிமலை மட்டும் அல்ல, தமிழகம் முழுவதும் இருக்கின்ற மலைவாழ் மக்களுக்கு பாதை வசதி அமைக்கப்பட்டு வருகிறது. அதேபோல மின்சாரமில்லாத கிராமங்களில் மின்சார இணைப்பு கொடுக்கும் பணியை மேற்கொண்டிருக்கிறோம். அது முடியாத இடங்களில் சோலார் விளக்குகளை அமைத்து கொண்டிருக்கிறோம்.

இங்குள்ள குழந்தைகள் இணையவழியில் கல்வி கற்க ஏதுவாக செல்போன் டவர் அமைக்க அரசு நடவடிக்கை எடுக்கும். பெரும்பாலான மலைவாழ் மக்கள் வாழ்கிற கிராமங்களுக்கு சாலை, குடிநீர், தெருவிளக்கு வசதி என அடிப்படை வசதிகளையும் படிப்படியாக செயல்படுத்திக் கொண்டிருக்கின்றோம்.

இங்கே கொல்லிமலை, ஏற்காடு என 2 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. எம்.ஜி.ஆர். காலத்திலும் சரி, ஜெயலலிதா காலத்திலும் சரி இங்கே அ.தி.மு.க. தான் வெற்றிபெற்றது. வரவிருக்கும் சட்டமன்ற தேர்தலிலும் அ.தி.மு.க. வெற்றிபெற நீங்கள் முழு ஒத்துழைப்பை நல்க வேண்டும். இந்த மலைவாழ் மக்கள் சமுதாயம் முன்னேற எங்களுடைய அரசு தொடர்ந்து பாடுபடும்.

இவ்வாறு அவர் பேசினார்.

அதனைத்தொடர்ந்து அலங்காநத்தம் பிரிவில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:-

அரசுப்பள்ளி மாணவர்களின் மருத்துவக்கனவை நிஜமாக்கும் 7.5 சதவீத உள்ஒதுக்கீடு, அம்மா மினி கிளினிக் திட்டம், கிராமப்புற சாலைகள் சீரமைப்பு திட்டம், மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணினி, முதியோர் ஓய்வூதியத்தொகை திட்டம், உழைக்கும் மகளிருக்கு அம்மா இருசக்கர வாகனம், ஏழை பெண்களின் திருமணத்துக்காக தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டம் என எண்ணற்ற திட்டங்களினால் கல்வி, மருத்துவம், தொழில்துறை என அனைத்து துறைகளிலும் தமிழகம் முதன்மை மாநிலமாக திகழ்கிறது.

ஆனால் இந்த ஆட்சியில் எந்த திட்டமும் வரவில்லை என மு.க.ஸ்டாலின் குறை கூறிவருகிறார். குடும்பத்திற்காக உருவாக்கப்பட்ட கட்சி தி.மு.க. மன்னர் ஆட்சி போல, குடும்பத்திற்காக மட்டுமே கட்சி நடத்துகிறார் மு.க.ஸ்டாலின். அவர்களுக்கு தேர்தலில் தக்க பாடம் புகட்ட வேண்டும். அ.தி.மு.கவில் சாதாரண தொண்டன் கூட எம்.பி., எம்.எல்.ஏ., ஆக முடியும். ஏன் முதல்-அமைச்சராக கூட வரமுடியும். மக்களுக்காக உழைக்கின்ற கட்சியான அ.தி.மு.க.வை தேர்தலில் வெற்றிபெற செய்யவேண்டும்.

பொதுமக்கள் அரசாங்கத்தை நாடி சென்றதை மாற்றி மக்களை தேடி அரசாங்கம் என்ற அடிப்படையில் முதல்-அமைச்சரின் சிறப்பு குறைதீர்க்கும் திட்டம் அறிவிக்கப்பட்டு அனைத்து மாவட்டங்களிலும் செயல்படுத்தப்பட்டது. இன்றைக்கு தமிழகம் மின் மிகை மாநிலமாக திகழ்கிறது. மேலும் விவசாயிகளுக்கு வழங்கி வந்த இலவச மின்சாரத்தை தொடர்ந்து இந்த அரசு வழங்கும் என்ற மகிழ்ச்சியான செய்தியை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த கொரோனா காலத்திலும் அனைத்து மாவட்டங்களுக்கும் சென்று ஆலோசனைக் கூட்டம் நடத்திய ஒரே முதல்-அமைச்சர் இந்தியாவிலேயே நான் மட்டும் தான். விரைவில் தேர்தல் வரவுள்ளது. பொய் பிரசாரத்தின் மூலம் மக்களை ஏமாற்றி ஆட்சிக்கு வரத்துடிக்கும் தி.மு.க.வுக்கு மக்கள் தக்க பாடம் புகட்டி, மீண்டும் அ.தி.மு.க. ஆட்சி தொடர எங்களது வேட்பாளர்களுக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து அமோக வெற்றி பெறச் செய்யவேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

மேலும் செய்திகள்