கிருஷ்ணகிரி மாவட்டத்தில், 4-ந் தேதி முதல் 5.13 லட்சம் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு - கலெக்டர் தகவல்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வருகிற 4-ந் தேதி முதல் 5 லட்சத்து 13 ஆயிரத்து 318 அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படுகிறது என்று கலெக்டர் ஜெயசந்திரபானுரெட்டி தெரிவித்துள்ளார். இதுகுறித்து கலெக்டர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

Update: 2020-12-31 14:47 GMT
கிருஷ்ணகிரி,

பொங்கல் பண்டிகையை தமிழக மக்கள் சிறப்பாகவும், மகிழ்ச்சியாகவும் கொண்டாடும் வகையில் அனைத்து அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்களுக்கும் ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழு நீள கரும்பு, 20 கிராம் முந்திரி, 20 கிராம் உலர் திராட்சை, 5 கிராம் ஏலக்காய் மற்றும் ரூ.2,500 ஆகியவை அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பை வழங்க தமிழக முதல்-அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 5 லட்சத்து 13 ஆயிரத்து 318 அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசு தொகுப்பு தமிழக அரசால் வழங்கப்பட உள்ளது. இந்த பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் பணி அடுத்த மாதம் (ஜனவரி) 4-ந் தேதி (திங்கட்கிழமை) முதல் தொடங்கி 12-ந் தேதி வரை நியாயவிலைக்கடைகள் மூலம் வழங்கப்பட உள்ளது.

அடுத்த மாதம் (ஜனவரி) 13-ந் தேதி விடுபட்ட அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட உள்ளது. பொங்கல் பரிசு தொகுப்பு குறித்த சந்தேகங்களுக்கு மாவட்ட வழங்கல் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வசிக்கும் அனைத்து அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்களும் தமிழக அரசின் பொங்கல் பரிசு தொகுப்பை பெற்று பயனடையுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்