வேலை வாங்கி தருவதாக ரூ.15 லட்சம் மோசடி செய்த சித்தா டாக்டர் கைது; 2 ஆண்டுக்கு பிறகு சிக்கினார்

தேனி மாவட்டம் போடியை சேர்ந்தவர் அருள். இவருக்கு தேனியில் வசித்து வந்த சித்தா டாக்டர் சேது கண்ணன் (வயது 42) அறிமுகம் ஆனார்.

Update: 2020-12-31 05:30 GMT
சித்தா டாக்டர் சேது கண்ணன்.
சேதுகண்ணன், சென்னையில் தனக்கு தெரிந்தவர்கள் மூலம் ரெயில்வே, விமான நிலையம் ஆகிய இடங்களில் வேலை வாங்கி தருவதாக கூறியுள்ளார். இதை நம்பிய அருள், தனது மனைவிக்கு ரெயில்வே துறையில் வேலை வேண்டி ரூ.10 லட்சத்தை சேது கண்ணனிடம் கொடுத்தார். அதேபோல், போடியை சேர்ந்த ரெங்கராஜன் என்பவர் தனக்கு விமான நிலையத்தில் வேலை வேண்டி ரூ.5 லட்சத்தை அவரிடம் கொடுத்தார். ஆனால், பணத்தை வாங்கிக்கொண்டு இருவருக்கும் வேலை வாங்கிக்கொடுக்காமல் சேது கண்ணன் மோசடி செய்துள்ளார். விசாரணையில், சென்னையில் வசித்து வந்த டேவிட் என்பவரும் இதற்கு உடந்தையாக இருப்பது தெரியவந்தது.

இதுகுறித்து அருள் அளித்த புகாரின் பேரில் கடந்த 2018-ம் ஆண்டு சேதுகண்ணன், டேவிட் ஆகிய இருவர் மீதும் தேனி மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் தலைமறைவாக இருந்த இருவரையும் போலீசார் தேடி வந்தனர். இந்தநிலையில் 2 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த சேது கண்ணன், சென்னை அருகே அய்யம்பாக்கத்தில் வசித்து வருவது தெரியவந்தது. இதை அறிந்த தனிப்படை போலீசார் சென்னைக்கு சென்றனர். அங்கு சேது கண்ணனை கைது செய்து தேனிக்கு நேற்று அழைத்து வந்தனர். அவரிடம் தலைமறைவாக உள்ள டேவிட் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்