நீலகிரி கேர்ன்ஹில் வனப்பகுதியில் சுற்றுலா பயணிகளை கவர வனவிலங்குகளின் மாதிரிகள் காட்சிக்கு வைப்பு; மரங்களில் பறவைகள் இருப்பது போன்று தத்ரூபமாக வடிவமைப்பு
கேர்ன்ஹில் வனப்பகுதியில் வனவிலங்குகளின் மாதிரிகள் காட்சிக்கு வைக்கப்பட்டு உள்ளது. மரங்களில் பறவைகள் இருப்பது போன்று தத்ரூபமாக வடிவமைக்கப்பட்டு இருக்கிறது.
பொருள் விளக்க மையம்
நீலகிரி மாவட்டம் ஊட்டி கேர்ன்ஹில் வனப்பகுதியில் வனத்துறை மூலம் சூழல் சுற்றுலா செயல்படுத்தப்பட்டு வருகிறது. இங்கு காட்டெருமை, கடமான், சிறுத்தை, நீலகிரி லங்கூர் குரங்கு உள்ளிட்ட வனவிலங்குகள் உள்ளன. இங்குள்ள பொருள்விளக்கம் மையத்தில் சிறுத்தை, லங்கூர் குரங்கு, கடமான் பதப்படுத்தி காட்சிக்கு வைக்கப்பட்டு உள்ளன.
பசுமையான வனப்பகுதியின் நடுவே சுற்றுலா பயணிகள் நடந்து சென்று காட்சி முனையில் நின்றபடி இயற்கை காட்சிகளை கண்டு ரசிக்கலாம். மரங்களுக்கு நடுவே பொருத்தப்பட்ட தொங்கு பாலத்தில் குழந்தைகளுடன் நடந்து மகிழலாம்.
சிறப்பு தகவல்கள்
8 மாதங்களாக மூடப்பட்டு இருந்த இந்த வனப்பகுதியில் சுற்றுலா பயணிகளை கவர மரங்களில் நீலகிரி வாழ் பறவைகள் இருப்பது போலவும், மலபார் அணில் மரக்கிளையில் அமர்ந்து இருப்பது போன்றும் தத்ரூபமாக வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. மேலும் காட்டெருமை கொம்பு மற்றும் வனவிலங்குகளின் சிறப்பு தகவல்கள் இடம் பெற்று உள்ளது.
மேலும் மேற்கு தொடர்ச்சி மலை காட்சியை போன்று ஒரு அறை வடிவமைக்கப்பட்டு, அங்கு நீலகிரி வரையாடுகள் நிற்பதுபோல காட்சிப்படுத்தப்பட்டு இருக்கிறது.
ஊரடங்குவுக்கு பின்னர் கடந்த 7-ந் தேதி முதல் இந்த சுற்றுலா தலம் திறக்கப்பட்டது. சுற்றுலா பயணிகளை கவருவதற்காக ஆர்கிட் மலர் செடிகள் மற்றும் நீலகிரியின் பழைய புகைப்படங்கள், பறவைகளின் புகைப்படங்கள், வனவிலங்குகளின் மாதிரிகள், பழங்குடியின மக்களின் புகைப்படங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.