மேற்கு மண்டலத்தில் திருட்டு போன ரூ.8.45 கோடி சொத்துகள் மீட்பு; போலீஸ் ஐ.ஜி. பெரியய்யா பேட்டி
மேற்குமண்டலத்தில் திருட்டு போன ரூ.8 கோடியே 45 லட்சம் சொத்துகள் மீட்கப்பட்டதாக போலீஸ் ஐ.ஜி. பெரியய்யா கூறினார்.
ஐ.ஜி. பெரியய்யா பேட்டி
தமிழக மேற்கு மண்டல போலீஸ் ஐ.ஜி. பெரியய்யா கோவை ரேஸ்கோர்சில் உள்ள அலுவலகத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு, சேலம் புறநகர், நாமக்கல், கிருஷ்ண கிரி, தர்மபுரி ஆகிய 8 மாவட்டங்களை உள்ளடக்கிய மேற்கு மண்டலத்தில் கடந்த 2019-ம் ஆண்டு சாலை விபத்து இறப்பு 2 ஆயிரத்து 82 ஆக இருந்தது. விழிப்புணர்வு காரணமாக வாகன விபத்து இறப்பு இந்த ஆண்டு 1675 ஆக குறைந்துள்ளது. இது முந்தைய ஆண்டை விட 19.55 சதவீதம் குறைவு. 2019-ம் ஆண்டு மொத்தம் 12, 619 வழக்குகள் பதிவாகி இருந்த நிலையில் இந்த ஆண்டு அது 10 ஆயிரத்து 286 ஆக குறைந்துள்ளது. இது 18.48 சதவீதம் குறைவாகும்.
ரூ.20 கோடி அபராதம்
நடப்பு ஆண்டில் மொத்தம் 33 லட்சத்து 93 ஆயிரத்து 835 மோட்டார் வாகன விபத்து வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 14 லட்சத்து 18 ஆயிரத்து 798 வழக்குகள் அதிகமாகும். இந்த ஆண்டு மோட்டார் வாகன வழக்குகளுக்காக ரூ.20 கோடியே 54 லட்சத்து 56 ஆயிரத்து 340 அபராதம் வசூலிக்கப்பட்டு அரசு கருவூலத்தில் செலுத்தப்பட்டது.
போலீஸ் நிலையங்கள் வாரியாக அதிக சாலை விபத்துகள் நடக்கும் இடங்களை கண்டறிந்து பிளாக் ஸ்பாட் என குறியிட்டு அங்கு விபத்துகள் நடக்காதவாறு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. ஒவ்வொரு மாவட்டத்திலும் மாதத்திற்கு ஒரு நாள் விபத்து இல்லாத நாளாக அறிவித்து அன்று விபத்து ஏற்படாதவாறு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
ரூ.8.45 கோடி சொத்துகள் மீட்பு
கொலை, கொலை முயற்சி, மற்றும் அடி தடி வழக்குகள் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 102 குறைந்துள்ளது. இந்த ஆண்டு ஆதாய கொலை, திருட்டு வழக்குகள் 1,454 பதிவாகி உள்ளது. இது கடந்த ஆண்டை விட 766 வழக்குகள் குறைவு. கடந்த ஆண்டு 15 ஆதாய வழக்குகளும், 238 வழிப்பறி வழக்குகளும், இந்த ஆண்டு 13 ஆதாய வழக்கு, 111 வழிப்பறி வழக்குகளும் பதிவாகி உள்ளன.
மேற்கு மண்டலத்தில் திருட்டு போன சொத்துகளில் 68 சதவீத பொருட்கள் மீட்கப்பட்டது. அதாவது திருட்டு போன ரூ.12.36 கோடி சொத்துகளில் ரூ.8.45 கோடி மதிப்புள்ள சொத்துகள் மீட்கப்பட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டன.
இவ்வாறு அவர் கூறினார்.