கோவை உக்கடத்தில் ஆக்கிரமித்து கட்டப்பட்ட வழிபாட்டு தலங்கள் அகற்றம்; மாநகராட்சி அதிகாரிகள் அதிரடி
கோவை உக்கடம் மஜித் காலனியில் ஆக்கிரமித்து கட்டப்பட்டு இருந்த வழிபாட்டு தலங்களை மாநகராட்சி அதிகாரிகள் நேற்று அகற்றினர்.
ஸ்மார்ட் சிட்டி
கோவை மாநகராட்சியின் கட்டுப்பாட்டில் உள்ள உக்கடம் பெரியகுளம், வாலாங்குளம், குறிச்சி குளம், முத்தண்ணன் குளம் உள்ளிட்ட குளங்கள் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் மேம்படுத்தப்பட்டு வருகிறது. இதற்காக குளக்கரையில் ஆக்கிரமித்து கட்டப்பட்டு உள்ள வீடுகள் இடித்து அகற்றப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் வாலாங்குளத்தையொட்டி மஜித் காலனி உள்ளது. இங்கு சுமார் 400 குடும்பங்கள் ஆக்கிரமித்து வீடுகள் கட்டி இருந்தனர். இவர்களுக்கு குடிசை மாற்று வாரியம் சார்பில் கோவைப்புதூர், வெள்ளலூர் உள்ளிட்ட பகுதிகளில் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டன. அதில் இவர்களுக்கு வீடுகள் ஒதுக்கப்பட்டதும், கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் இந்த ஆக்கிரமிப்பு வீடுகள் இடிக்கப்பட்டன.
வழிபாட்டு தலங்கள்
இந்த காலனியில் 2 அம்மன் கோவில்கள், மதுரை வீரன் கோவில், விநாயகர் கோவில், பள்ளிவாசல் ஆகிய வழிபாட்டு தலங்கள் இருந்தன. இந்த வழிபாட்டு தலங்கள் மட்டும் இடித்து அகற்றப்படாமல் இருந்து வந்தது. இதனிடையே மாநகராட்சி அதிகாரிகள், வழிபாட்டு தலங்களின் நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் அவர்கள் வழிபாட்டு தலங்களை இடித்து அகற்ற சம்மதம் தெரிவித்தனர்.
இதனைத்தொடர்ந்து நேற்று பள்ளிவாசல் உள்ளிட்ட வழிபாட்டு தலங்களில் உள்ள மேற்கூரைகளை அகற்றும் பணி நடைபெற்றது. இதுகுறித்து மாநகராட்சி நகரமைப்பு திட்ட அதிகாரிகள் கூறியதாவது:-
பள்ளி வாசல், கோவில்கள் உள்ளிட்ட வழிபாட்டு தலங்களை அகற்றுவது குறித்து நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இதில் உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து வழிபாட்டு தலங்களை அகற்றும் பணி தொடங்கப்பட்டு உள்ளது. இன்று (நேற்று) வழிபாட்டு தலங்களின் மேற்கூரைகள் அகற்றப்பட்டன.
இதையடுத்து நாளை (இன்று) பொக்லைன் எந்திரங்கள் மூலம் வழிபாட்டு தலங்கள் இடித்து அகற்றப்படும். பின்னர் மீண்டும் இங்கு ஆக்கிரமிப்பு ஏற்படுவதை தடுக்க சுற்றுச்சுவர் கட்டும் பணி சில நாட்களில் தொடங்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.