தூக்குப்போட்டு சிறுமி தற்கொலை; புத்தாண்டுக்கு தாய் பிரியாணி செய்து கொடுக்க மறுத்ததால் சோகம்

குன்றத்தூரில் தூக்குப்போட்டு சிறுமி தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2020-12-31 00:27 GMT
தூக்கில் தொங்கினார்
குன்றத்தூர் கிழக்கு குளக்கரை தெருவை சேர்ந்தவர் பழனி. கார் டிரைவர். இவரது மனைவி தேவி. இவர்களது மகள் தீபிகா (வயது 12). குன்றத்தூரில் உள்ள அரசு பெண்கள் பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வந்தார். நேற்று முன்தினம் மாலை தேவி வீட்டில் இருந்து வெளியே உறவினர் வீட்டுக்கு சென்று விட்டார்.

வீட்டில் தீபிகா மட்டும் தனியாக இருந்தார். இரவு தேவி வீட்டுக்கு வந்து பார்த்தபோது தீபிகா தூக்கில் பிணமாக தொங்கிய நிலையில் கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இது குறித்து குன்றத்தூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் தீபிகாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

பிரியாணி செய்து கொடுக்க மறுத்ததால்
குன்றத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணன் விசாரணை மேற்கொண்டார் விசாரணையில் புத்தாண்டு தினத்தன்று புத்தாண்டை கொண்டாட வீட்டில் தனது தாயிடம் பிரியாணி செய்து தரும்படி கேட்டுள்ளார். புத்தாண்டு தினம் வெள்ளிக்கிழமை வருவதால் அன்று பிரியாணி செய்து கொடுக்க முடியாது என்று அவரது தாய் மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது.

இதனால் ஏற்பட்ட வாக்குவாதத்தில் தீபிகா தனது அறைக்குள் சென்று தற்கொலை செய்து கொண்டது முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்