நாளையும், ஞாயிற்றுக்கிழமையும் வார நாட்கள் அட்டவணைபடி புறநகர் மின்சார ரெயில்கள் இயக்கம்; சென்னை ரெயில்வே கோட்டம் அறிவிப்பு
சென்னையில் பல்வேறு கட்ட ஊரடங்குக்கு பிறகு அத்தியாவசிய பணியாளர்களுக்காக மின்சார ரெயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. தற்போது மின்சார ரெயிலில் பயணிக்க அனைத்து பயணிகளுக்கும் தெற்கு ரெயில்வே அனுமதி அளித்துள்ளது.;
அத்தியாவசிய பணியாளர்கள், பெண்கள், குழந்தைகள் தவிர மற்றவர்கள் மின்சார ரெயிலில் பயணிக்க நேரக்கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. இதுவரை 500 மின்சார ரெயில் சேவைகள் சென்னையில் இயக்கப்படுகிறது. வார விடுமுறை நாட்களில் (ஞாயிற்றுக்கிழமை) மட்டும் ஒரு மணி நேர இடைவெளியில் குறைவான மின்சார ரெயில்கள் இயக்கப்படும்.
இந்தநிலையில் வருகிற ஜனவரி 1-ந்தேதி (நாளை) முதல் 3-ந்தேதி வரை, 410 மின்சார ரெயில் சேவைகள் கடந்த 27-ந்தேதி வரை இயக்கப்பட்ட கால அட்டவணைப்படி இயக்கப்படும் என சென்னை ரெயில்வே கோட்டம் அறிவித்துள்ளது.
நாளை (புத்தாண்டு) மற்றும் 3-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) விடுமுறை தினம் என்பதால், கூட்ட நெரிசலை தவிர்க்கும் விதமாக, வாரநாட்கள் அட்டவணைப்படி பயணிகளின் வசதிக்காக 410 மின்சார ரெயில் சேவைகள் இயக்கப்படுகிறது என தெற்கு ரெயில்வே சென்னை கோட்டம் அறிவித்துள்ளது.