கர்நாடகத்தில் ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கும் ஆயுஸ் டாக்டர் நியமனம் மந்திரி சுதாகர் தகவல்

கர்நாடகத்தில் ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கும் தலா ஒரு ஆயுஸ் டாக்டர் நியமனம் செய்யப்படுவார்கள் என்று சுகாதாரத்துறை மந்திரி சுதாகர் கூறினார்.

Update: 2020-12-31 00:14 GMT
பெங்களூரு,

பெங்களூருவில் உள்ள ராஜீவ்காந்தி மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தில் ஓமியோபதி தின விழா நேற்று நடைபெற்றது. இதில் சுகாதாரத்துறை மந்திரி சுதாகர் கலந்துகொண்டு பேசும்போது கூறியதாவது:-

மருத்துவ துறை தொடர்பான விஷயங்களில் நமது நாடு அதிகளவில் உபகரணங்களை இறக்குமதி செய்கிறது. இதை குறைக்க வேண்டியது அவசியம். அதே நேரத்தில் நாம் அதிகளவில் மருத்துவ ஆராய்ச்சியில் ஈடுபட வேண்டும். இதன் மூலம் மருத்துவ துறையில் புதிய கண்டுபிடிப்புகளை கண்டுபிடிக்க வேண்டும். ஆர்சனிகம் ஆல்பம் என்ற ஓமியோபதி மருந்து கொரோனாவை கட்டுப்படுத்துவதாக சொல்லப்படுகிறது.

ஆனால் ஓமியோபதியில் கொரோனாவுக்கு எதிராக ஒரு முறையான மருந்தை உருவாக்க வேண்டியது அவசியம். ஓமியோபதி மருத்துவ முறையை நாம் ஊக்குவிக்க வேண்டும். அந்த மருந்து, டைபாய்டு நோய்க்கு எதிராக அதிகளவில் பயன்படுத்தப்பட்டது. பிரதமர் மோடி அரசு, ஆயுஸ் மருத்துவ முறைக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கிறது. கர்நாடகத்தில் அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கும் தலா ஒரு ஆயுஸ் டாக்டர் நியமனம் செய்யப்படுவார். இவ்வாறு மந்திரி சுதாகர் பேசினார்.

அதைத்தொடர்ந்து நிருபர்களுக்கு பேட்டி அளித்த சுதாகர், "இங்கிலாந்தில் இருந்து இந்தியா திரும்பியவர்களில் 107 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதில் 20 பேருக்கு புதிய வகை வைரஸ் தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. அதில் 7 பேர் கர்நாடகத்தில் உள்ளனர். 3 பேர் பெங்களூருவிலும், 4 பேர் சிவமொக்காவில் இருக்கிறார்கள். கொரோனாவை கட்டுப்படுத்த ஒவ்வொருவரும் அரசின் வழிகாட்டுதலை கட்டாயம் பின்பற்ற வேண்டும்" என்றார்.

மேலும் செய்திகள்