ஆங்கிலப் புத்தாண்டை முன்னிட்டு திருவள்ளூர் மாவட்டத்தில் அனைத்து மத வழிபாட்டு தலங்களிலும் இன்று நள்ளிரவு வழிபாட்டுக்கு தடை; மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை என கலெக்டர் எச்சரிக்கை
ஆங்கிலப் புத்தாண்டை முன்னிட்டு திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து மத வழிபாட்டு தலங்களிலும் இன்று நள்ளிரவு வழிபாட்டுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக கலெக்டர் தெரிவித்துள்ளார்.
அனுமதி இல்லை
திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் பா.பொன்னையா விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
திருவள்ளூர் மாவட்டத்தில் வருகிற ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு, உணவகங்கள், தங்கும் விடுதிகள், கேளிக்கை விடுதிகள் உள்ளிட்ட இடங்களில் இன்று (வியாழக்கி்ழமை) இரவு நடத்தப்படும் கொண்டாட்டங்களில் பொதுமக்கள் பங்கேற்க இருந்தனர்.
இதன் காரணமாக தற்போது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ள கொரோனா நோய்த் தொற்றானது அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. மேலும் சில வெளிநாடுகளில் இருந்து வரும் நபர்கள் மூலம் உருமாற்றம் பெற்ற கொரோனா தற்போது மீண்டும் பரவி வருகின்ற சூழ்நிலையில், நோய் தடுப்பு பணிகளை கட்டுப்படுத்த வேண்டியது அவசியமாகும்.
எனவே இன்று இரவு நடத்தப்படும் அனைத்து கொண்டாட்டங்களுக்கும் அனுமதி கிடையாது.
வழிபாட்டு தலங்களுக்கு தடை
எனவே நீர் நிலைகளில் பொதுமக்கள் பெருமளவில் கூடுவதும், ஆபத்தான வகையில் குளிப்பது, விளையாடுவது மற்றும் படகு போக்குவரத்து போன்ற செயல்கள் முற்றிலும் தடை செய்யப்பட்டு உள்ளது. எனவே பொதுமக்களின் நலன் கருதி 31-ந்தேதி முதல் வருகின்ற 3-ந் தேதி வரையிலான நாட்களில் பூண்டி, செம்பரம்பாக்கம், செங்குன்றம், சோழவரம் ஆகிய ஏரிகளிலும், ஊத்துக்கோட்டை தரைப்பாலம், பெரியபாளையம் பாலம், தாமரைப்பாக்கம் தடுப்பணை, பழவேற்காடு ஏரி, கடற்கரை மற்றும் நீர் நிரம்பி உள்ள அனைத்து நீர் நிலைகளிலும் பொதுமக்கள் அணுகுவதற்கு அனுமதி இல்லை.
மேலும் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து மத வழிபாட்டு தலங்களிலும் இன்று (வியாழக்கிழமை) நள்ளிரவு வழிபாடுகள் மற்றும் பிரார்த்தனைகள் தடைசெய்யப்பட்டுள்ளது. மேலும் இவற்றினை மீறுபவர்கள் மீது போலீசார் மூலம் கடுமையாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
எனவே பொதுமக்கள் நள்ளிரவு வழிபாடுகள் பிரார்த்தனைகளை தவிர்த்து காலை வழிபாடு, பிரார்த்தனைகளை உரிய முக கவசம் மற்றும் சமூக இடைவெளி உடன் மேற்கொள்ளுமாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு இருந்தது.