செங்கல்பட்டு மாவட்டத்தில் கோரிக்கை மனுவை வாங்க வட்டார வளர்ச்சி அலுவலர் இல்லாததால் பா.ம.க., வன்னியர் சங்கத்தினர் சாலை மறியல்

கோரிக்கை மனுவை வாங்க வட்டார வளர்ச்சி அலுவலர் இல்லாததால் பா.ம.க. மற்றும் வன்னியர் சங்கத்தினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2020-12-31 00:01 GMT
பா.ம.க. மற்று்ம் வன்னியர் சங்கத்தினர் சாலை மறியலில் ஈடுபட்டபோது
சாலை மறியல்
வன்னியர்களுக்கு 20 சதவீத தனி ஒதுக்கீடு வழங்கக்கோரி காஞ்சீபுரம் மாவட்டம் படப்பையில் உள்ள குன்றத்தூர் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலகத்திற்கு பா.ம.க. மற்றும் வன்னியர் சங்கத்தினர் வட்டார வளர்ச்சி அலுவலரிடம் மனு அளிக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்திற்கு பா.ம.க. மாவட்ட துணை செயலாளர் சீனிவாசன் தலைமை தாங்கினார். கோஷங்கள் எழுப்பியவாறு வட்டார வளர்ச்சி அலுவலகத்திற்கு மனு அளிக்க சென்றனர்.

வட்டார வளர்ச்சி அலுவலகத்திற்கு வந்தவர்கள் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் அப்துல் நயிம்பாஷா, வேல்முருகன் ஆகியோர் இல்லதாதை கண்டு ஆத்திரம் அடைந்த பா.ம.க. மற்றும் வன்னியர் சங்கத்தினர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தின் நுழைவு வாயிலின் முன் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து மணிமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராதாகிருஷ்ணன், சப்-இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். வட்டார வளர்ச்சி அலுவலர் வந்தவுடன் அவரிடம் மனு அளித்துவிட்டு செல்லுங்கள் என போலீசார் தெரிவித்தனர்.

இதனையடுத்து அங்கு காத்திருந்த வன்னியர் சங்கம் மற்றும் பா.ம.க. வினர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் வருவதற்கு ஒரு மணி நேரத்திற்கும் மேல் ஆனதால் வட்டார வளர்ச்சி அலுவலரை கண்டித்தும் வட்டார வளர்ச்சி அலுவலகத்தை முற்றுகையிட்டும் படப்பை-ஸ்ரீபெரும்புதூர் செல்லும் சாலையில் அமர்ந்து கண்டன கோஷங்கள் எழுப்பியவாறு சாலை மறியலில் ஈடுபட்டனர். போலீசார் பேச்சு வார்த்தை நடத்தினர். இதனையடுத்து காலதாமதமாக வந்த வட்டார வளர்ச்சி அலுவலரை சந்தித்து வன்னியர் சங்கம் மற்றும் பா.ம.க.வினர் 20 சதவீத இட ஒதுக்கீடு கோரிய மனுவை அளித்தனர்.

மாமல்லபுரம்
மாமல்லபுரம் பேரூராட்சி, திருக்கழுக்குன்றம் ஒன்றிய பா.மக. மற்றும் வன்னியர் சங்கத்தினர் மாமல்லபுரம்-திருக்கழுக்குன்றம் பைபாஸ் சாலையில் இருந்து செங்கல்பட்டு மத்திய மாவட்ட பா.ம.க. செயலாளர் காரணை தி.ராதா தலைமையில் மோட்டார் சைக்கிளில் ஊர்வலமாக வந்து 10 ஆயிரம் பேரிடம் பெறப்பட்ட கையெழுத்துகள் அடங்கிய மனுவை திருக்கழுக்குன்றம் ஒன்றிய ஆணையரிடம் அளித்தனர்.

காட்டாங்கொளத்தூர்
செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்கொளத்தூர் பா.ம.க. மற்றும் வன்னியர் சங்கம் சார்பில் சமூக முன்னேற்ற சங்க நிர்வாகி செல்லப்பா தலைமையில் பா.ம.க. மற்றும் வன்னியர் சங்கத்தினர் காட்டாங்கொளத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு திரண்டு இடஒதுக்கீடு வாசகம் எழுதப்பட்ட பதாகைகளை ஏந்தியவாறு கோஷங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.

அதன் பின்னர் பா.ம.க. மற்றும் வன்னியர் சங்கத்தினர் கையயெழுத்து போட்ட இடஒதுக்கீடு கோரிக்கை மனுவை வட்டார வளர்ச்சி அலுவலரிடம் தருவதற்கு ஒன்றிய அலுவலகத்திற்குள் சென்றனர். அப்போது அலுவலகத்தில் 2 வட்டார வளர்ச்சி அலுவலர்கள் இல்லாமல் வெளியே சென்றுள்ளதாக சக ஊழியர்கள் தெரிவித்தனர். இதனால் ஆவேசம் அடைந்த பா.ம.க. மற்றும் வன்னியர் சங்கத்தினர் இட ஒதுக்கீடு கோரிக்கை மனுவை வாங்காமல் வெளியே சென்ற வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மாலதி, சாய் கிருஷ்ணன் ஆகியோரை கண்டித்து அலுவலக நுழைவுவாயில் முன்பு தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் மறைமலைநகர் இன்ஸ்பெக்டர் நந்தகோபால் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்.

தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் எங்களது இட ஒதுக்கீடு கோரிக்கை மனுவை நேரில் வந்து வட்டார வளர்ச்சி அலுவலர் வாங்கினால் மட்டுமே இங்கிருந்து கலைந்து செல்வோம் என்று கூறி தொடர்ந்து கண்டன கோஷங்களை எழுப்பி தர்ணாவில் ஈடுபட்டனர். இதனையடுத்து மறைமலைநகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் நந்தகோபால் வட்டார வளர்ச்சி அலுவலர் மாலதியை செல்போனில் தொடர்பு கொண்டு உடனடியாக நீங்கள் அலுவலகத்திற்கு வந்து இட ஒதுக்கீடு கோரிக்கை மனுவை பெற்று கொள்ள வேண்டும் என்று கூறினார். இதனையடுத்து ½ மணி நேரம் கழித்து வட்டார வளர்ச்சி அலுவலர் மாலதி ஒன்றிய அலுவலகத்திற்கு வந்தார். அப்போது அங்கிருந்த பாமக மற்றும் வன்னியர் சங்கத்தினர் பி.டி.ஓ. மாலதியை கண்டித்து கோஷங்களை எழுப்பியதால் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் மாலதியை அலுவலகத்திற்குள் போலீசார் அழைத்து சென்றனர். இதனையடுத்து வட்டார வளர்ச்சி அலுவலர் மாலதியிடம் பாமக மற்றும் வன்னியர் சங்கத்தினர் கோரிக்கை மனுவை அளித்தனர்.. இந்த சம்பவத்தால் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

அச்சரப்பாக்கம்
செங்கல்பட்டு மாவட்டம் அச்சரப்பாக்கத்தில் பா.ம.க. மாவட்ட செயலாளர் ஆத்தூர் வா.கோபாலக் கண்ணன், பா.ம.க மாநில செயற்குழு உறுப்பினரும், முன்னாள் மாவட்ட செயலாளருமான எடையாளம் கி.குமரவேல் ஆகியோர் தலைமையில் கோரிக்கை மனுவை அச்சரப்பாக்கம் வட்டார வளர்ச்சி அலுவலர் பாபுவிடம் பா.ம.க. மற்றும் வன்னியர் சங்கத்தினர் வழங்கினர்.

மதுராந்தகம்
செங்கல்பட்டு தெற்கு மாவட்ட பா.ம.க. சார்பில் மதுராந்தகம் பஸ் நிலையத்தில் மாநில பொதுச் செயலாளர் பொன் கங்காதரன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் சிறப்பு அழைப்பாளராக மாநில அமைப்பு செயலாளர் .செல்வகுமார் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். பின்னர் வட்டார வளர்ச்சி அலுவலர் தண்டபாணியிடம் மனு அளித்தனர்.

சித்தாமூர் ஊராட்சி ஒன்றியத்தில் தமிழக உழவர் பேரியக்க மாநில துணை செயலாளர் சாந்தமூர்த்தி தலைமையில் வட்டார வளர்ச்சி அலுவலர் பரணியிடம் கோரிக்கை மனு அளித்தனர்.

சோழிங்கநல்லூர்
வன்னியர்களுக்கு தனி இட ஒதுக்கீடு கேட்டு சோழிங்கநல்லூர் தாசில்தார் மோகனிடம் பா.ம.க. மாநில இளைஞ்ர் அணி துணை செயலாளர் எஸ். எம். நிர்மல்குமார் தலைமையில் மனு அளிக்கப்பட்டது.

உத்திரமேரூர்
உத்திரமேரூர் ஒன்றிய பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் வன்னியர் சங்கத்தின் சார்பாக உத்திரமேரூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பாக ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு தொகுதி அமைப்பு செயலாளர் ஸ்ரீதர் தலைமை தாங்கினார். பின்னர் வட்டார வளர்ச்சி அலுவலர் சீனிவாசனிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

மேலும் செய்திகள்