வடமதுரை அருகே, நூற்பாலை தொழிலாளர்களை ஏற்றி சென்ற வேன் கவிழ்ந்து 30 பேர் காயம்
வடமதுரை அருகே நூற்பாலை தொழிலாளர்களை ஏற்றி சென்ற வேன் கவிழ்ந்து 30 பேர் காயம் அடைந்தனர்.
வடமதுரை,
திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் அருகே உள்ள ஒரு நூற்பாலைக்கு திருச்சி மாவட்டம் மணப்பாறை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளை சேர்ந்த தொழிலாளர்கள் தினமும் வேலைக்கு வந்து செல்கின்றனர். அவர்கள் ஒரு வேனில் அழைத்து வரப்படுகின்றனர். நேற்று முன்தினம் இரவு அவர்கள் வேலை முடிந்து ஊருக்கு அந்த வேனில் திரும்பி சென்று கொண்டிருந்தனர். வேனை மணப்பாறை அருகே உள்ள சீத்தப்பட்டியை சேர்ந்த ஜீவா (வயது 24) என்பவர் ஓட்டினார்.
வேனில் 30-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இருந்தனர். வடமதுரையை அடுத்த திண்டுக்கல்-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் தங்கம்மாபட்டி போலீஸ் சோதனை சாவடி அருகே வேன் சென்றபோது திடீரென்று டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்தது. இதில் வேன் தாறுமாறாக ஓடி சாலை நடுவே இருந்த தடுப்புச்சுவரில் மோதி கவிழ்ந்தது. இதில் வேனுக்குள் இருந்த தொழிலாளர்கள் அய்யோ, அம்மா காப்பாற்றுங்கள் என்று அபயக்குரல் எழுப்பினர்.
அவர்களின் அலறல் சத்தம் கேட்டு சோதனை சாவடியில் பணியில் இருந்த போலீசார் விரைந்து சென்று அவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். இந்த விபத்தில் ஜீவா, பெரியகுளத்துபட்டியை சேர்ந்த ராஜேஸ்வரி (38), சீத்தப்பட்டியை சேர்ந்த கார்த்திகா (28), பிரியா (25), அஞ்சம்மாள் (38), மல்லிகா (33), முத்துலட்சுமி (33), ரேகா (21) உள்பட 30 பேர் காயமடைந்தனர்.
அவர்களை மீட்டு சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் போலீசார் சேர்த்தனர். மேலும் இந்த விபத்து குறித்து வடமதுரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.