முறைகேடு நடக்க வாய்ப்பு உள்ளதால் 80 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு தபால் ஓட்டு வழங்க கூடாது - அரசியல் கட்சிகள் வலியுறுத்தல்
முறைகேடு நடக்க வாய்ப்பு உள்ளதால், 80 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு தபால் ஓட்டு வழங்க கூடாது என்று அரசியல் கட்சிகள் வலியுறுத்தி உள்ளன.
மதுரை,
தமிழகத்தில் விரைவில் சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது. இதற்கு ஆயத்தமாகும் விதமாக வாக்காளர் பட்டியல் தயாரிக்கும் பணி நடந்து வருகிறது. அதற்கான வரைவு வாக்காளர் பட்டியல் கடந்த மாதம் 16-ந் தேதி வெளியிடப்பட்டது. அதன்படி மதுரை மாவட்டத்தில் உள்ள 10 சட்டசபை தொகுதிகளிலும் சேர்த்து மொத்தம் 26 லட்சத்து 7 ஆயிரத்து 693 வாக்காளர்கள் உள்ளனர். அதில் ஆண்கள் 12 லட்சத்து 84 ஆயிரத்து 99, பெண் வாக்காளர்கள் 13 லட்சத்து 23 ஆயிரத்து 420 மற்றும் மூன்றாம் பாலினத்தவர்கள் 174 ஆகும். அதன்படி ஆண் வாக்காளர்களை விட பெண் வாக்காளர்களே அதிகமாக உள்ளனர்.
இந்த வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாதவர்கள் தங்களது பெயர்களை சேர்க்கவும், திருத்தம் செய்யவும் மனுக்கள் கொடுக்கலாம் என்று அறிவிக்கப்பட்டது. அதற்கான காலக்கெடு 16-ந் தேதியுடன் முடிவடைந்தது.
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க மாவட்டத்தில் உள்ள 10 தொகுதிகளிலும் சேர்த்து மொத்தம் 89 ஆயிரத்து 824 பேர் மனு கொடுத்துள்ளனர். இந்த மனுக்கள் மீதான விசாரணை நடந்து வருகிறது. அதில் தகுதியான மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டு இறுதி வாக்காளர் பட்டியல் அடுத்த மாதம் 20-ந் தேதி வெளியிடப்படுகிறது.
அதற்கிடையில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பது தொடர்பாக ஆலோசனை கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. மதுரை மாவட்ட தேர்தல் பார்வையாளர் சிஜி தாமஸ் முன்னிலை வகித்தார். கலெக்டர் தலைமை தாங்கினார். அதில் அ.தி.மு.க., தி.மு.க, பா.ஜனதா, காங்கிரஸ் உள்பட பல்வேறு கட்சிகளை சேர்ந்த பிரநிதிகள் கலந்து கொண்டு ஆலோசனைகள் தெரிவித்தனர். அப்போது அவர்கள் கூறியதாவது:-
புதிதாக பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கு விண்ணப்பத்துள்ளவர்களை விவரங்களை அரசியல் கட்சிகளுக்கு வழங்க வேண்டும். அது குறித்து ஆய்வு செய்து தகுதியான நபர்களை சேர்ப்பதற்கு நாங்களும் உறுதுணையாக இருப்போம். அதேபோல் கொரோனா காரணமாக 80 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு தபால் ஓட்டு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த தபால் ஓட்டு மூலம் முறைகேடு நடக்க வாய்ப்பு உள்ளது. எனவே தபால் ஓட்டு வழங்ககூடாது. மேலும் தற்போது ஒரு வாக்குச்சாவடிக்கு 1,500 வாக்காளர்கள் என்பதனை 1000 என்று குறைக்கப்படுகிறது. இந்த பணியினை விரைந்து செய்ய வேண்டும். அதன் விவரங்களையும் அரசியல் கட்சிகளுக்கு வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
கூட்டத்தில் பார்வையாளர் சிஜி தாமஸ் பேசும் போது, தேர்தலை நியாயமாகவும், நேர்மையாகவும் நடப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை தேர்தல் ஆணையம் எடுத்து வருகிறது. அதற்கு அரசியல் கட்சிகள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றார். கலெக்டர் அன்பழகன் பேசும் போது, அரசியல் கட்சியினரின் கோரிக்கைகள் தேர்தல் ஆணையத்தின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.