அனுமதியின்றி கோலப்பொடி கற்களை ஏற்றி வந்த லாரி பறிமுதல்
திருமங்கலம் அருகே அனுமதியின்றி கோலப்பொடி கற்களை ஏற்றி வந்த லாரி பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் இதுதொடர்பாக லாரி டிரைவரை போலீசார் கைது செய்தனர்.
திருமங்கலம்,
திருமங்கலம் அருகே கப்பலூர் தொழிற்பேட்டையில் கோலப்பொடி தயார் செய்யும் தனியார் நிறுவனம் உள்ளது. இந்த நிறுவனத்திற்கு கோலப்பொடி தயார் செய்யும் வெள்ளக்கற்கள் வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படுகிறது.
வெளிநாடுகளில் இருந்து கப்பல்கள் மூலம் கொண்டு வந்து தூத்துக்குடியில் இறக்குமதி செய்யப்படும். அங்கிருந்து லாரிகள் மூலம் முறையான அனுமதி பெற்று வெள்ளக்கற்களை ஏற்றி வந்து கோலப்பொடி தயார் செய்யப்படுவது வழக்கம்.
இந்தநிலையில் அனுமதியின்றி வெளிமாவட்டங்களில் இருந்து கல் ஏற்றி வந்து கோலப்பொடி தயார் செய்வதாக திருமங்கலம் துணை போலீஸ் சூப்பிரண்டு வினோதினிக்கு தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் துணை போலீஸ் சூப்பிரண்டு தலைமையில் போலீசார் கப்பலூர் அருகே உள்ள தனியார் நிறுவனத்தை ஆய்வு செய்தனர்.
அப்போது கரூர் மாவட்டத்தில் இருந்து கோலப் பொடி கற்கள் அனுமதியின்றி ஏற்றி வந்து உற்பத்தி செய்வது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து கற்கள் எடுத்து வந்த லாரி டிரைவர் கரூரை சேர்ந்த ஜெயராமன்(வயது 52) என்பவரை கைது செய்து லாரியை பறிமுதல் செய்தனர். அத்துடன் தனியார் நிறுவன உரிமையாளர் மீனாட்சி சுந்தரத்திடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.