மதுரையில் துணிகரம்: வீடுபுகுந்து தாய்-மகளை கட்டிப்போட்டு 27 பவுன் நகை கொள்ளை - முகமூடி கொள்ளையர்களுக்கு வலைவீச்சு

மதுரை வீடு புகுந்த கொள்ளையர்கள் தாய்-மகளை கட்டி வைத்து தாக்கி 27 பவுன் நகை, பணத்தை கொள்ளையடித்து தப்பி விட்டனர்.

Update: 2020-12-30 15:02 GMT
மதுரை,

மதுரை தல்லாகுளம் அழகர்கோவில் மெயின் ரோடு அவுட்போஸ்ட் பகுதியை சேர்ந்தவர் தங்கவேல். இவரது மனைவி சரோஜா(வயது 68). இவர்களுக்கு ஒரு மகன், 2 மகள் உள்ளனர். இவர்களுக்கு திருமணமாகி தனித்தனியாக வசித்து வருகின்றனர். இந்தநிலையில் தங்கவேல் சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். எனவே சரோஜா தனது தாயார் கமலா(80) உடன் வசித்து வந்தார்.

சம்பவத்தன்று இரவு இவர்கள் இருவரும் வீட்டில் தூங்கி கொண்டிருந்தனர். அப்போது நள்ளிரவு நேரத்தில் பின்வாசல் வழியாக முகமூடி அணிந்த 4 பேர் வீட்டிற்குள் புகுந்தனர். அதில் 2 பேர் சரோஜாவையும், மற்ற 2 பேர் கமலாவையும் பிடித்து கொண்டனர். அப்போது அவர்கள் சத்தம் போட கொள்ளையர்கள் அவர்களை சரமாரியாக தாக்கினார்கள். பின்னர் அவர்கள் இருவரையும் சேலையால் தனித்தனியாக கட்டினர். மேலும் அவர்கள் சத்தம் போடாமல் இருக்க வாயை துணியால் கட்டினர்.

பின்னர் மர்மநபர்கள் தாய், மகள் அணிந்திருந்த தங்க வளையல், மோதிரம், சங்கிலி என மொத்தம் 27 பவுன் நகையை பறித்தனர். பின்னர் பீரோ சாவியை கொடுக்குமாறு சரோஜாவிம் கேட்டுள்ளனர். ஆனால் அவர் தரமறுத்தால் ஆத்திரத்தில் அவரை முகத்தில் சரமாரியாக தாக்கினார்கள். இதில் அவரது பற்கள் உடைந்து வாயில் இருந்து ரத்தம் கொட்டியது. அதன் பின்னர் அவர்கள் சாவியை வாங்கி பீரோவில் இருந்த 85 ஆயிரம் ரூபாயை எடுத்து கொண்டு தப்பிவிட்டனர். அவர்கள் சென்ற பிறகு சரோஜாவும், அவரது தாயாரும் தங்களை கட்டியிருந்த கட்டுகளை அவிழ்த்தனர்.

பின்னர் அவர்கள் சம்பவம் குறித்து போலீசாருக்கும், உறவினர்களுக்கும் தகவல் கொடுத்தனர். உடனே சம்பவ இடத்திற்கு போலீஸ் துணை கமிஷனர் சிவபிரசாத், தல்லாகுளம் உதவி கமிஷனர் வினோஜி மற்றும் போலீசார் விரைந்து வந்தனர். அவர்கள் கொள்ளையர் தாக்குதலில் காயம் அடைந்த தாய், மகளை சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் கைரேகை நிபுணர்கள் வீட்டில் பதிவான தடயங்களை சேகரித்தனர்.

போலீசார் அவர்களது வீட்டின் அருகே கண்காணிப்பு கேமரா உள்ளதாக ஆய்வு செய்தனர். அப்போது அந்த பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமரா அணைத்து வைக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. தல்லாகுளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து முகமூடி கொள்ளையர்கள் யார் என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

தனியாக வீட்டில் வசித்து வந்தவர்களை தாக்கி நகை, பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்