9 மாதங்களுக்கு பிறகு மாவட்டத்தில் 76 டாஸ்மாக் பார்கள் திறப்பு - அதிகாரிகள் ஆய்வு

சேலம் மாவட்டத்தில் கொரோனா ஊரடங்கால் மூடப்பட்டிருந்த 76 டாஸ்மாக் பார்கள் 9 மாதங்களுக்கு பிறகு நேற்று திறக்கப்பட்டன. அரசு விதித்துள்ள வழிகாட்டு நெறிமுறைகள் பின்பற்றப்படுகிறதா? என அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.

Update: 2020-12-30 10:37 GMT
சேலம்,

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக மதுக்கடைகளும், பார்களும் மூடப்பட்டிருந்தன. தற்போது படிப்படியாக தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருவதால் மதுக்கடைகள் திறக்கப்பட்டாலும் கடந்த 9 மாதங்களாக பார்கள் திறக்க அனுமதிக்கப்படவில்லை.

இந்த நிலையில் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் டாஸ்மாக் பார்களை திறக்க அரசு அனுமதி அளித்தது. சேலம் மாவட்டத்தில் 220 டாஸ்மாக் கடைகள் உள்ளன. இதில் 76 டாஸ்மாக் பார்கள் செயல்பட்டு வருகின்றன. பார்கள் திறக்கப்படுவதையொட்டி நேற்று காலை ஊழியர்கள் அங்கு வந்து சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டனர். பின்னர் மதுக்கடைகள் திறக்கப்பட்டதும் அதையொட்டி உள்ள பார்களும் திறக்கப்பட்டு செயல்பட தொடங்கின.

சில இடங்களில் பார்களை அதன் உரிமையாளர்கள் திறந்து திருஷ்டி பூசணிக்காயை சுற்றி உடைத்தனர். இதையடுத்து மதுபிரியர்கள் பார்களுக்கு சென்று மது அருந்தியதை பார்க்க முடிந்தது.

மாவட்டத்தில் உள்ள பார்களில் 50 சதவீத இருக்கைகள் மட்டுமே போடப்பட்டிருந்தன. பார்களுக்கு செல்லும் அனைத்து மதுபிரியர்களின் பெயர், செல்போன் எண் உள்ளிட்ட விவரங்கள் சேகரிக்கப்பட்டன. முன்னதாக அவர்களின் உடல்வெப்பநிலையை தெர்மல் ஸ்கேனர் மூலம் பரிசோதனை செய்தனர். இதனிடையே அரசு விதித்துள்ள வழிகாட்டு நெறிமுறைகள் பின்பற்றப்படுகிறதா? என பார்களில் மாவட்ட மேலாளர் அம்பாயிரநாதன் தலைமையில் அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.

அப்போது அதிகாரிகள் பார் உரிமையாளர்களிடம், வாடிக்கையாளர்கள் முககவசம் அணிந்து வருவதுடன் சமூக இடைவெளியை பின்பற்றுகிறார்களா? என்பதை கண்காணிக்க வேண்டும், என்று அறிவுரை வழங்கினர். இதுதவிர பார்களில் ஆய்வு செய்ய 2 குழுக்கள் அமைத்து கண்காணிக்கப்பட்டு வருவதாக மாவட்ட மேலாளர் தெரிவித்தார்.

மேலும் செய்திகள்