அரசியலுக்கு வராதது ஏமாற்றம் அளிக்கிறது: சென்னை சென்றதும் ரஜினியை சந்தித்து பேசுவேன் கமல்ஹாசன் பேச்சு

அரசியலுக்கு வராதது ஏமாற்றம் அளிக்கிறது. சென்னை சென்றதும் ரஜினியை சந்தித்து பேசுவேன் என்று மயிலாடுதுறையில், கமல்ஹாசன் கூறினார்.

Update: 2020-12-30 03:47 GMT
மயிலாடுதுறை,

மயிலாடுதுறை சின்னக்கடை வீதியில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் சார்பில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் அந்த கட்சியின் தலைவர் கமல்ஹாசன் திறந்த காரில் நின்றபடி பேசினார்.

அப்போது அவர் பேசியதாவது:-

மாற்றம் நெருங்கி விட்டது

மயிலாடுதுறையில் குவிந்து கிடக்கும் குப்பைகள், தேங்கி நிற்கும் சாக்கடை கழிவுகள் போன்ற அவலங்களை நேரில் பார்த்தேன். இந்த அவலங்கள் அனைத்தும் மக்கள் நீதி மைய ஆட்சியின்போது களையப்படும். வழியெங்கும் மக்கள் அளித்த வரவேற்பு தமிழகத்திற்கு மாற்றம் நெருங்கிவிட்டது என்பதை உணர்த்துகிறது.

மக்கள் நீதி மய்யம் அரசியல் பழிபோடும் கட்சியோ, அரசியல் பழிவாங்கும் கட்சியோ அல்ல, வழிகாட்டும் அரசியல் கொண்ட இயக்கம்.

இவ்வாறு அவர் பேசினார்.

தொடர்ந்து தனியார் திருமண மண்டபத்தில் விவசாயிகள், பெண்கள், இளைஞர்கள் சந்திப்பு கூட்டம் நடந்தது. கூட்டத்தில் மாவட்ட செயலாளர் எம்.என்.ரவிச்சந்திரன் வரவேற்று பேசினார். தொடர்ந்து கமல்ஹாசன் பேசியதாவது:-

சினிமாக்காரர்கள்

என்னைப்பற்றி பேசுவதாக நினைத்து தங்கள் தலைவர்களையே கிண்டல் செய்கிறோம் என்பதை தெரியாமல் அவர்கள் பேசிக்கொண்டிருக்கிறார்கள். தமிழகத்தில் காமராஜருக்கு பிறகு ஆட்சிக்கு வந்த அனைவருமே சினிமாக்காரர்கள் தான் என்பதை அவர்கள் அறிந்து கொள்ள வேண்டும். அரசியலில் எனக்கு என்ன தெரியும் என்று ஆளுங்கட்சியினர் கேட்கின்றனர்.

தமிழகம் கடன் வாங்குவதில் முதலிடம் வகிக்கிறது. ஒவ்வொரு தமிழனின் தலைக்கும் ரூ.60 ஆயிரம் கடன்சுமை சுமத்தப்பட்டுள்ளது. கல்வி பட்ஜெட்டில் ரூ.34 ஆயிரத்து 381 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஒரு மாணவனுக்கு ரூ.45 ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது. ஆனால் பள்ளிகள் தரமாக இல்லை.

ஊழல் பட்டியல்

சுகாதாரத்திற்கு ரூ.15 ஆயிரத்து 863 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. ஆனால் சாகாமலேயே நரகத்தை பார்க்க வேண்டுமென்றால் தமிழகத்தில் அரசு மருத்துவமனைக்கு சென்றாலே போதுமானது. இதெல்லாம் எனக்கு தெரியும்.

தி.மு.க.வினரின் ஊழல் பட்டியலை அ.தி.மு.க.வினர் வாசிக்கிறார்கள். அவர்கள் அதை செய்யட்டும். அ.தி.மு.க.வினரின் ஊழல் பட்டியலை நான் வெளியிடுகிறேன்.

ஏமாற்றம் அளிக்கிறது

நண்பர் ரஜினிகாந்த் அரசியல் கட்சி தொடங்கவில்லை என்பது அவர்களது ரசிகர்களைப்போன்று எனக்கும் சற்று ஏமாற்றம்தான். அவரது ரசிகர்களுக்கு உள்ள மன நிலைதான் எனக்கும் உள்ளது. இந்த பிரசார பயணம் தொடங்குவதற்கு முன்பு கூட ரஜினியிடம் போனில் பேசினேன்.

இந்த பிரசார பயணத்தை முடித்து விட்டு சென்னை சென்றதும் மீண்டும் ரஜினியிடம் பேசுவேன். நண்பர் ரஜினியின் ஆரோக்கியம் முக்கியம். என் ரஜினி நலமாக இருக்க வேண்டும். அவர் எங்கிருந்தாலும் நலமாக வாழ வேண்டும். இப்போதைக்கு இவ்வளவுதான் சொல்ல முடியும். சென்னை சென்று ரஜினியை சந்தித்து விட்டு உங்களிடம் பேசுகிறேன்.

இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில் மாநில துணைத் தலைவர் டாக்டர் மகேந்திரன், நற்பணி இயக்க பொறுப்பாளர் ரிபாயுதீன், நிர்வாகிகள் மணிசங்கர், மனோகர், செந்தில், அகோரம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்