வடகாடு ரேஷன் கடையில் பயோமெட்ரிக் எந்திரம் பழுதால் சாலை மறியலில் ஈடுபட முயன்ற பொதுமக்கள்

வடகாடு ரேஷன் கடையில் பயோமெட்ரிக் எந்திரம் பழுதால் பொதுமக்கள் சாலை மறியிலில் ஈடுபட முயன்றனர்.

Update: 2020-12-30 00:22 GMT
வடகாடு,

புதுக்கோட்டை மாவட்டம், வடகாடு பெரியகடை வீதி அருகே தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க கிட்டங்கியில் ஒரு புறம் ரேஷன் கடை செயல்பட்டு வருகிறது.

இக்கடையில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்ப அட்டை தாரர்கள் பொருட்கள் வாங்குவதாக கூறப்படுகிறது. இங்கு நேற்று காலை 9 மணியில் இருந்து ரேஷன் பொருட்களை வாங்க பொதுமக்கள் காத்திருந்தனர். பயோமெட்ரிக் எந்திரத்தில் பழுது காரணமாக கைரேகை பதிவு முறையாக பதியவில்லை என்றும், இதனால் காலையில் இருந்து மாலை 4 மணி வரை பொதுமக்கள் காத்திருந்தனர்.

சாலை மறியல் முயற்சி

இந்நிலையில், திடீரென பொதுமக்கள் பெரியகடை வீதியில் சாலை மறியலில் ஈடுபட முயன்றனர். இதுகுறித்து தகவல் அறிந்த வடகாடு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் மறியலில் ஈடுபட முயன்ற பொதுமக்களிடம் ேபச்சுவார்த்தை நடத்தி சமாதானம் செய்து ரேஷன் பொருட்கள் கிடைக்க உறுதி அளித்ததை தொடர்ந்து பொதுமக்கள் கலைந்து சென்றனர். மீண்டும் இதேநிலை நீடித்தால் சாலை மறியலில் ஈடுபடுவதை தவிர வேறு வழியில்லை என்றும் பொதுமக்கள் கூறினார். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்