மராட்டியத்தில் ஓர் புதுமை; கல்விக்கோவிலாக மாறிய போலீஸ் நிலையம்; குடிசைப்பகுதி மாணவர்களுக்கு பாடம் நடத்தப்படுகிறது
ஆன்லைன் கல்வியை கற்க முடியாத நிலையில் உள்ள குடிசைப்பகுதி மாணவர்களுக்காக மராட்டியத்தில் உள்ள ஒரு போலீஸ் நிலையத்தில் கல்வி கற்று கொடுக்கப்படுகிறது.
போலீஸ் நிலையத்தில் கல்வி
பள்ளிகளுக்கு செல்ல முடியாமல் குழந்தைகளுக்கு கொரோனா கால்கட்டு போட்டு விட்டது. ஆன்லைன் முறையில் பாடம் கற்க வேண்டிய கட்டாயத்துக்கு மாணவர்கள் தள்ளப்பட்டு உள்ளனர். அத்தனை மாணவர்களும் ஆன்லைனில் கல்வி கற்று வருகிறார்களா என்பது கேள்விக்குறி தான். குறிப்பாக ஏகப்பட்ட ஏழை மாணவர்களுக்கு ஆன்லைன் கல்வி என்பது எட்டாக்கனியாகவே உள்ளது.
ஏழை பிள்ளைகளின் இந்த குறையாக போக்க மராட்டிய மாநிலம் அவுரங்கபாத்தில் உள்ள பந்தாலிக் நகர் போலீசார் புதுமை முயற்சியில் இறங்கி உள்ளனர். போலீஸ் நிலையத்தில் வைத்து கல்வி கற்றுக்கொடுக்க முடிவு செய்தனர்.
ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர்
இதற்காக அப்பகுதியை சேர்ந்த ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியரான எஸ்.பி. ஜவால்கரை அணுகினர். அவரும் தாயுள்ளதோடு இலவசமாக கல்வி கற்றுக்கொடுக்க முன் வந்தார். இதையடுத்து போலீஸ் நிலைய வளாகத்தில், அந்த பகுதியை சேர்ந்த குடிசைப்பகுதி மாணவர்களுக்கு ஆங்கிலம் மற்றும் கணித பாடம் கற்றுக்கொடுக்கும் பணி நேற்று 3-வது நாளாக நடந்தது. இதில் முதல் கட்டமாக நடுநிலை பள்ளியை சேர்ந்த 14 மாணவ-மாணவிகள் பங்கேற்று உள்ளனர்.
இதுபற்றி அந்த போலீஸ் நிலைய உதவி இன்ஸ்பெக்டர் கனிஷியாம் சேனாவானே கூறுகையில், கொரோனா காலகட்டத்தில் பல மாணவர்கள் கல்வியை கற்க முடியாமல் இருப்பதை கண்டு நாங்கள் இந்த முயற்சியை மேற்கொண்டோம். மாணவர்கள் ஆர்வத்துடன் வரத் தொடங்கி உள்ளனர், என்றார்.
மக்கள் மகிழ்ச்சி
சட்டம்-ஒழுங்கை காப்பதும், குற்றங்களை தடுப்பதும் தான் போலீசாரின் பணி என்பதை கடந்து ஏழை குழந்தைகளுக்காக கல்வி கற்று கொடுக்கும் பணியில் ஈடுபட்டு இருப்பதும், அதுவும் போலீஸ் நிலையத்திலே பாடம் நடத்தப்பட்டு வருவதும் வியத்தகு பணியாகும்.
போலீஸ் நிலைய படியேறுவதை யாரும் விரும்பாத நிலையில், போலீஸ் நிலையமே கல்வி கோவிலாக மாறி இருப்பதை அறிந்து அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.