கடல்நீர் சுத்திகரிப்பு ஆலையில் இருந்து குடிநீர் கொண்டு செல்ல ராட்சத குழாய்கள் அரியானா மாநிலத்தில் இருந்து வரவழைப்பு
புதிதாக அமைக்கப்பட உள்ள கடல் நீர் சுத்திகரிப்பு ஆலையில் இருந்து குடிநீர் கொண்டு செல்ல ராட்சத குழாய்கள் அரியானா மாநிலத்தில் இருந்து லாரி மூலம் வரவழைக்கப்பட்டுள்ளது.
100 மில்லியன் லிட்டர்
செங்கல்பட்டு மாவட்டம் நெம்மேலியில் உள்ள கடல் நீர் குடிநீராக்கும் முதல் ஆலையில் தற்போது தினமும் 100 மில்லியன் லிட்டர் கடல் நீர் சுத்திகரிக்கப்பட்டு தினமும் தென்சென்னை பகுதிகளுக்கு வினியோகிக்கப்படுகிறது.
தற்போது தென் சென்னை பகுதிக்கு மேலும் குடிநீர் தேவை அதிகரிப்பால் தமிழக அரசு சென்னை குடிநீர் வடிகால் வாரியத்தின் கீழ் தற்போது உள்ள குடிநீர் ஆலைக்கு அருகில் ஜப்பான் நாட்டு உதவியுடன் ரூ.6 ஆயிரத்து 78 கோடி மதிப்பீட்டில் தினமும் 400 மில்லியன் லிட்டர் கடல் நீரை சுத்திகரித்து குடிநீராக்கும் புதிய ஆலை அமைக்கப்பட்டு அதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது.
புதிய குடிநீர் ஆலை
இந்த புதிய குடிநீர் நீர் ஆலையில் சுத்திகரிக்கப்படும் குடிநீர் தென்சென்னையில் உள்ள வேளச்சேரி, ஆலந்தூர், பரங்கிமலை, மேடவாக்கம், கோவிலம்பாக்கம், நன்மங்கலம், கீழ்கட்டளை, மூவரசன்பேட்டை, சோழிங்கநல்லூர், உள்ளகரம்-புழுதிவாக்கம், மடிப்பாக்கம் போன்ற பகுதிகளுக்கும் சிறுசேரியில் உள்ள தகவல் தொழில் நுட்ப பூங்கா பகுதிக்கும் ராட்சத குழாய்கள் மூலம் கொண்டு செல்லப்பட்டு பொதுமக்களுக்கு வினியோகிக்கப்பட்ட உள்ளன.
இதையடுத்து நெம்மேலி கிழக்கு கடற்கரையில் இருந்து தென் சென்னைக்கு குடிநீர் கொண்டு செல்ல குழாய் பதிக்கும் பணிகள் நடந்து வருகின்றன. இதற்காக தற்போது 12 மீட்டம் நீளம் கொண்ட 1,000 ராட்சத குழாய்கள் அரியானா மாநிலத்தில் இருந்து கொண்டு வரப்படுகின்றன.
தற்போது முதற்கட்டமாக 200 ராட்சத குழாய்கள் கன்டெய்னர் லாரி மூலம் கொண்டு வரப்பட்டு இ.சி.ஆர். சாலையில் வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இந்த ்குழாய்கள் முதல் கட்டமாக நெம்மேலி, புதிய கல்பாக்கம், பேரூர் ஆகிய பகுதியில் பூமிக்கடியில் பதிக்கப்பட்டு 2 குழாய்களும் ஒன்றோடு, ஒன்று வெல்டிங் மூலம் இணைக்கும் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.