காட்டுமன்னார்கோவில் அருகே முன்விரோத தகராறில் வீடுகள் சூறை; 4 பேருக்கு அரிவாள் வெட்டு

காட்டுமன்னார்கோவில் அருகே முன்விரோத தகராறில் வீடுகள் சூறையாடப்பட்டது. 4 பேருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது.;

Update: 2020-12-29 15:59 GMT
காட்டுமன்னார்கோவில்,

காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள சண்டன் கிராமத்தை சேர்ந்தவர் விசுவநாதன்(வயது 56). இவருக்கும், அதே ஊரைச் சேர்ந்த தங்கசாமி(58) என்பவருக்கும் இடம் பிரச்சினை சம்பந்தமாக முன்விரோதம் இருந்து வருகிறது. தங்கசாமியின் மகள் திலகவதி(23) மகளிர் குழு தலைவியாக உள்ளார். இவர் அந்த பகுதியில் உள்ள குழு உறுப்பினர்களுக்கு கடன் வழங்கி வருகிறார். இந்த குழுவில் மணிகண்டனின் மனைவி சோபனா கடன் வாங்கி உள்ளார். இந்த பணத்தை வசூல் செய்வதற்காக தங்கசாமி, சோபனா வீட்டிற்கு சென்றார். அப்போது அங்கிருந்த சோபனாவின் உறவினரான விசுவநாதனின் மகன் விஜய்(21) ஆத்திரமடைந்து தங்கசாமியை திட்டி, தள்ளி வி்ட்டதாக கூறப்படுகிறது.

இது பற்றி அறிந்த தங்கசாமியின் உறவினர் பாலசுப்பிரமணியன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் 10-க்கும் மேற்பட்டோர் அரிவாள் மற்றும் கட்டைகளுடன் விஜய் வீ்ட்டிற்கு சென்றனர். அங்கிருந்த பொருட்கள் அனைத்ைதயும் அடித்து நொறுக்கினர். மேலும் விஜய்யின் ஆதரவாளர்கள் 3 பேர் வீடுகளையும் அவர்கள் அடித்து, நொறுக்கி சூறையாடினர்.

அதுமட்டுமின்றி விஜய், மற்றும் அவரது ஆதரவாளர்கள் ராஜா(20), மணிகண்டன்(30), விக்னேஷ்(20) ஆகிய 4 பேரையும் அரிவாளால் வெட்டி, கட்டையாலும் தாக்கினர். இதில் காயமடைந்த 4 பேரும் சிகிச்சைக்காக சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

இது குறித்து விஜய் கொடுத்த புகாரின் பேரில் காட்டுமன்னார்கோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தங்கசாமி, சுந்தரமூர்த்தி(48) ஆகிய 2 பேரை கைது செய்தனர். மேலும் தலைமறைவான 11 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்