வேப்பனப்பள்ளி அருகே, விவசாய நிலங்களில் புகுந்து யானைகள் அட்டகாசம்
வேப்பனப்பள்ளி அருகே விவசாய நிலங்களில் புகுந்து யானைகள் அட்டகாசம் செய்ததால் விவசாயிகள் கவலை அடைந்தனர்.
வேப்பனப்பள்ளி,
தமிழகம் மற்றும் ஆந்திர மாநில எல்லையில் உள்ள வனப்பகுதியில் 30-க்கும் மேற்பட்ட யானைகள் முகாமிட்டுள்ளன. இந்த யானைகள் 2 குழுக்களாக பிரிந்து தமிழகம், கர்நாடக மற்றும் ஆந்திர மாநில வனப்பகுதிகளில் சுற்றித்திரிகின்றன. மேலும் அவ்வப்போது வனப்பகுதியில் இருந்து யானைகள் வெளியேறி விவசாய நிலங்களில் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வருகின்றன.
இந்த நிலையில் நேற்று முன்தினம் அதிகாலை தமிழக எல்லையில் வேப்பனப்பள்ளி அருகே உள்ள சீனிவாசபுரம் கிராமத்தில் 15-க்கும் மேற்பட்ட யானைகள வனப்பகுதியில் இருந்து வெளியேறி அங்குள்ள விவசாய நிலங்களில் புகுந்து வாழை மற்றும் பாகற்காய் தோட்டம், தக்காளி தோட்டங்களில் புகுந்து அட்டகாசம் செய்தன.
மேலும் தென்னை மரங்கள் மற்றும் பப்பாளி மரங்களை வேருடன் சாய்த்து அட்டகாசம் செய்தன. இதுகுறித்து விவசாயிகள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அதன்பேரில் வனத்துறையினர் விரைந்து சென்று யானைகளை பட்டாசு வெடித்து காட்டுக்குள் விரட்டினர். விவசாய நிலங்களில் புகுந்து யானைகள அட்டகாசம் செய்ததால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். மேலும் ேசதமடைந்த பயிர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.