இருசக்கர வாகனங்கள் நிறுத்த தடை: கலெக்டர் அலுவலகத்தில் போலீசார் தீவிர கண்காணிப்பு

வேலூர் கலெக்டர் அலுவலக முன்பகுதியில் இருசக்கர வாகனங்கள் நிறுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Update: 2020-12-29 11:58 GMT
வேலூர்,

வேலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வாரந்தோறும் திங்கட்கிழமை அன்று மக்கள் குறைதீர்வு கூட்டம் நடப்பது வழக்கம். கொரோனா ஊரடங்கு காரணமாக குறைதீர்வு கூட்டம் அந்தந்த வருவாய் ஆய்வாளர் அலுவலகங்களில் கூட்டம் நடந்து வருகிறது.

எனினும் கலெக்டர் அலுவலகத்துக்கு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பொதுமக்கள் குறைகளை தெரிவிக்க வருகின்றனர். மனுக்களை அதிகாரிகள் நேரடியாக பெறாவிட்டாலும் மனுக்களை பொதுமக்கள் செலுத்தும் வகையில் அலுவலகத்தில் புகார் பெட்டி வைக்கப்பட்டுள்ளது. அதில் பொதுமக்கள் தங்களது கோரிக்கை மனுக்களை போட்டுச் செல்கின்றனர்.

இதனிடையே, மண்எண்ணெய்யை ஊற்றிக் கொண்டு சிலர் தீக்குளிக்க முயற்சி செய்கின்றனர். இந்தச் சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறி வருவதால் கலெக்டர் அலுவலகத்தில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

அதன்படி நேற்று கலெக்டர் அலுவலகத்துக்கு வரும் அதிகாரிகள் அடையாள அட்டையை காட்டிய பின்னரே உள்ளே செல்ல அனுமதிக்கப்பட்டனர். நுழைவாயில் மற்றும் அலுவலக பகுதி முழுவதும் போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு இருந்தனர்.

மேலும் அலுவலக வளாகத்தில் முன்பகுதியில் வழக்கமாக பொதுமக்கள் தங்களது இருசக்கர வாகனங்களை நிறுத்துவார்கள். அப்போது அங்கு வாகனங்கள் நிறுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. கலெக்டர் அலுவலகத்துக்கு வரும் வாகனங்கள் அலுவலக கட்டிட பின்பகுதியில் நிறுத்த அறிவுறுத்தப்பட்டனர்.

பொதுமக்கள் புகார் அளிக்க வசதியாக நுழைவு வாயில் பகுதியில் புகார் பெட்டி வைக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் அதில் தங்கள் மனுக்களை போட்டுச் சென்றனர். அலுவலகத்துக்கு வரும் பெண்களை அறையில் சோதனை செய்து உள்ளே அனுப்பினர். நுழைவு வாயில் பகுதியில் தண்ணீர் நிரப்பப்பட்ட குடம், வாளியில் மண் போன்றவற்றை தயார் நிலையில் வைத்திருந்தனர்.

மேலும் செய்திகள்