ஆம்பூர் அருகே, லாரி மீது கார் மோதியதில் 2 என்ஜினீயர்கள் பலி - சென்னையை சேர்ந்தவர்கள்

ஆம்பூர் அருகே லாரி மீது கார் மோதிய விபத்தில் 2 பேர் பலியானார்கள்.

Update: 2020-12-29 10:15 GMT
ஆம்பூர்,

சென்னை அண்ணாநகர் பகுதியை சேர்ந்தவர்கள் கோகுல் (வயது 28) மற்றும் யோகராஜ் (28). இவர்கள் நேற்று முன்தினம் விடுமுறை தினத்தையொட்டி பெங்களூருவில் உள்ள நண்பர்களை சந்திக்க சென்றனர். அன்று இரவு காரில் அவர்கள் சென்னைக்கு திரும்பிக்கொண்டிருந்தனர்.

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே மாராபட்டு பகுதியில் நள்ளிரவு 12 மணியளவில் இவர்களது கார் வந்து கொண்டிருந்தது.

அப்போது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டைஇழந்த கார் முன்னால் சென்று கொண்டிருந்த லாரி மீது மோதியதில் அப்பளம் போல் நொறுங்கியது.

சற்று நேரத்தில் தொடர்ந்து பின்னால் வந்து கொண்டிருந்த மற்றொரு கார் மற்றும் மினி லாரி அடுத்தடுத்து மோதியது. இந்த விபத்தில் லாரியின் பின்னால் இடித்த காரில் பயணம் செய்த கோகுல் மற்றும் யோகராஜ் ஆகியோர் பலத்த காயம் ஏற்பட்டது.

உடனடியாக அவர்கள் கோகுலை மீட்டு வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கும் மற்றும் யோகராஜை மீட்டு வேலூர் தனியார் மருத்துவமனைக்கும் ஆம்புலன்சில் அனுப்பி வைத்தனர். இதில் இருவரும் சிகிச்சை பலனின்றி இறந்து விட்டனர். பின்னால் வந்த கார் மற்றும் மினி லாரியில் வந்தவர்கள் எந்த காயமும் இன்றி உயிர் தப்பினர்.

இது குறித்து ஆம்பூர் தாலுகா போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்