மக்கள் நீதி மய்யம் முன்னெடுத்த கிராமசபை கூட்டங்களை மற்றவர்கள் போட்டி போட்டு நடத்துகிறார்கள் கமல்ஹாசன் பேச்சு

மக்கள் நீதி மய்யம் முன்னெடுத்த கிராமசபை கூட்டங்களை மற்றவர்கள் போட்டி போட்டு நடத்துகிறார்கள் என தஞ்சையில், கமல்ஹாசன் கூறினார்.

Update: 2020-12-29 04:51 GMT
தஞ்சாவூர்,

மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் நேற்று மதியம் தஞ்சை நாஞ்சிக்கோட்டை சாலை அண்ணாநகர், கீழவாசல் வெள்ளைப்பிள்ளையார் கோவில் அருகே 3-வது கட்ட தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். பின்னர் அவர் தஞ்சை சுற்றுலா ஆய்வு மாளிகை அருகே புதுஆற்றங்கரையில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் மாணவர்கள், இளைஞர்கள், பெண்களை சந்தித்து பேசினார்.

அப்போது அவர் பேசியதாவது:

நேர்மை என்று தைரியமாக சொல்லிக்கொள்ள ஆளும், ஆண்ட கட்சிகளுக்கு தகுதியோ, தைரியமோ கிடையாது. நாங்கள் பேசி நீங்கள் கேட்பது அல்ல எங்கள் அரசியல். நீங்கள் பேசி நாங்கள் செவிசாய்ப்பது தான் எங்களது அரசியல். உங்கள் தொகுதியின் வேட்பாளராக அறிவிக்கப்பட்டவர் உங்கள் வீடு தேடி வரும்போது ஓட்டு மட்டும் கேட்டு வரமாட்டார். இங்கு என்னென்ன குறைகள் என பட்டியல் போடுவார்.

கிராமசபை கூட்டம்

அந்த தொகுதி பெரியவர்கள் எல்லாம் அவருடன் அமர்ந்து இதை எல்லாம் நீங்கள செய்து முடிக்க வேண்டும். அதற்கான காலஅவகாசம் இவ்வளவு என சொல்லி அதை ஒரு உறுதிமொழி பத்திரத்தில் ஊர் பெரியவர்கள், வேட்பாளர் கையெழுத்து போட உறுதிமொழி அளிப்பவராக நானும் கையெழுத்து போடுவேன். அத்தனை நம்பிக்கை எங்களது திட்டங்கள் மீது இருக்கிறது.

கிராமசபை கூட்டத்தை நாங்கள் கண்டுபிடிக்கவில்லை. ஏற்கனவே இருந்த நல்வழியை மீண்டும் உங்களுக்கு நினைவுபடுத்தினோம். இப்பொழுது போட்டி போட்டுக்கொண்டு மற்றவர்கள் அதை செய்து கொண்டு இருக்கிறார்கள். நாங்கள் பழிவாங்கும் அரசியலோ, பழிபோடும் அரசியலோ செய்யமாட்டோம். நாங்கள் வழிகாட்டும் அரசியல் செய்ய வந்து இருக்கிறோம்.

ஆரம்பம்

அதற்கு ஆரம்பம் தான் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நாங்கள் கிராமசபை கூட்டத்தை முன்னெடுத்தது. உங்கள் உரிமைகளை நீங்கள் ஏதோ வரமாக பெறுகிறீர்கள். தானமாக பெறுவதை போல் பொறுகிறீர்கள். நீங்கள் பெற வேண்டிய உரிமைகள் நிறைய இருக்கிறது. அவற்றை உங்களுக்கு கொண்டு சேர்த்தால் தமிழகம் சீரமைக்கப்பட்டு விடும். சீரமைப்போம் என்று சொல்வது உங்களிடத்தில் இருந்து தான். நீங்களும் கைகோர்க்க வேண்டும். நேர்மை என்பது உங்களிடம் இருந்து வர வேண்டும். எங்களிடம் இருந்தும் வர வேண்டும். நடுவில் இருப்பவர்கள் தன்னாலே திருந்தி விடுவார்கள்.

நேர்மையாக இருப்பதும் ஒருவிதமான கவசமாக இருக்க வேண்டும். அது தன் வாழ்க்கையில் மட்டுமல்ல. பொதுவாழ்க்கையிலும் பெரிய கவசமாக இருக்கும் என்பதை உணர போகிறீர்கள். அதனால் தான் இந்த அரங்கமே நிரம்பி இருக்கிறது. இது குவாட்டர், பிரியாணிக்கு வந்தது அல்ல. எந்த மடையானாவது இது குவார்ட்டருக்கு கூடிய கூட்டம் என்று சொன்னால் அதற்கு பதில் சொல்ல எங்கள் கட்சியினர் தயாராக இருக்கிறார்கள்.

விளை நிலங்களை அழிக்கும் திட்டங்கள்

தஞ்சை மாநகரில் 51 வார்டுகளிலும் சாக்கடை பிரச்சினை தீர்க்கப்படாத பிரச்சினையாக உள்ளது. நாங்கள் சோழர் காலத்து ஏரிகளையே சீரமைக்க வந்து இருக்கிறோம். தஞ்சையில் போக்குவரத்து நெருக்கடியை நல்ல அதிகாரிகளை கொண்டு தீர்த்துவைக்க முடியும். நாட்டிற்கான நல்ல வி‌‌ஷயங்கள் செய்ய வேண்டியது இருக்கிறது. விளை நிலங்களை அழிக்கும் திட்டங்கள் கைவிடப்பட வேண்டும். அதற்கான எல்லா ஏற்பாடுகளையும் மக்கள் நீதி மய்யம் செய்யும்.

விவசாயிகளுக்கு தேவையின் அடிப்படையில் மானியம் வழங்கப்பட வேண்டும். தஞ்சை தமிழ்ப்பல்கலைக்கழகம் எம்.ஜி.ஆர். நிறுவியது. இதை முறைகேடுகளில் இருந்து மீட்டெடுக்கப்பட வேண்டும். என் சரசுவதிமகால், நம் சரசுவதிமகால் மொத்தமாக களவு போவதற்கு முன்பாக அது தடுத்து நிறுத்தப்பட வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

சினிமா புகழ்

தஞ்சை கீழவாசல் வெள்ளைப்பிள்ளையார் கோவில் அருகே கமல்ஹாசன் பேசும்போது, நான் 5 வயது முதல் சினிமா புகழ் பார்த்து இருக்கிறேன். புகழ் வெளிச்சம் என் மீது பட்டு இருக்கிறது. இதுபோன்ற அன்பை நான் பார்த்தது இல்லை. அதற்கு என் நன்றியை காட்டுவதற்கு ஒரே வழி உங்களுக்கு செய்ய வேண்டிய கடமையை மக்கள் நீதி மய்யம் செய்வது தான். ஒரு காலத்தில் சரித்திரத்தில் தலைநகரமாக திகழ்ந்த தஞ்சை இன்று சுத்தமில்லாத திறந்தவெளி சாக்கடை ஓடும் நகரமாக திகழ்கிறது. இதை மாற்றியே ஆக வேண்டும். அதற்கு எங்கள் கரத்திற்கு நீங்கள் வலு சேர்க்க வேண்டும்.

பல நேர்மையான திட்டங்களுடன் நாங்கள் வந்து இருக்கிறோம். வெறும் அடுக்குமொழி பேச்சால் உங்களை கொஞ்ச நேரம் சந்தோ‌‌ஷப்படுத்திவிட்டு அடுத்த தேர்தலில் மட்டும் தலையை காட்டும் அரசியல்வாதிகள் அல்ல நாங்கள். வேலை செய்ய வேண்டும் என்ற எண்ணத்துடன் திறமையானவர்கள் பலரும் கூடி வந்து இருக்கிறோம்.

எங்கள் கட்சியில் உயர் பதவியில் உள்ள அனைவருமே தனக்கென்று நல்ல தொழில் உள்ளவர்கள். என்னை பார்த்து நீங்கள் முழுநேர அரசியல்வாதியா? என கேட்கிறார்கள். யாருமே முழுநேரம் எதுவுமாகவே இருக்க முடியாது. தனக்கென்று ஒரு தொழில் இருக்க வேண்டும். அபபடி இருந்தால் இங்கே வந்து சம்பாதிக்க மாட்டார்கள் என்று கூறினார்.

எம்.ஜி.ஆர். சிந்தனை

தஞ்சை நாஞ்சிக்கோட்டை சாலை அண்ணாநகரில் பேசும்போது, மற்றவர்கள் காசு கொடுத்து கூட்டம் சேர்க்கும்போது நேர்மையாளர்கள் கூட்டம் இங்கே நிரம்பி வழிகின்றது. புதிய மாற்றத்திற்கு தமிழகம் தயாராகி விட்டது என்பதற்கு இதுவே போதுமான சான்று. இந்த மாற்றத்தை கொண்டு வரும் உரிமை, கடமை உங்களுக்கு இருக்கிறது. அதை செய்தால் தமிழகம் புதிய மாற்றத்தை நோக்கி நகரும். ஏழ்மையை மிக ஜாக்கிரதையாக பாதுகாத்து வைத்து இருக்கிறார்கள். காரணம் அந்த ஏழ்மை இருந்தால் தானே காசு கொடுத்து ஓட்டு வாங்க முடியும். ஏழ்மையை நீக்கிவிட்டால் அவர்கள் இ‌‌ஷ்டப்படி ஓட்டு போட்டுவிடுவார்கள்.

எப்படி எம்.ஜி.ஆர். இல்லாமை இல்லாத நிலை வேண்டும் என்று நினைத்தாரோ அதே சிந்தனையுடன் வந்து இருக்கும் ஒரே கட்சி மக்கள் நீதி மய்யம். திடீரென எம்.ஜி.ஆரை கையில் எடுத்து இருப்பதாக சொல்கிறார்கள். முதலில் அவர் தான் என்னை கையில் எடுத்தார். தோளில் சுமந்தார். அதனால் எனக்கு உரிமை இருக்கிறது. நல்லது நினைப்பவர்கள் அனைவரையும் நீட்சியாக, வாரிசாக நினைத்துக் கொள்ளலாம். காந்தி, காமராஜரை பற்றி சொல்கிறோம். ஏன் எம்.ஜி.ஆரை பற்றி சொல்லக்கூடாதா?. அதுதான் என் கேள்வி என்று கூறினார்.

இதில் பாடலாசிரியர் சினேகன், ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி சந்தோ‌‌ஷ்பாபு, டாக்டர் மகேந்திரன், மாநில பொதுச் செயலாளர் உமாதேவி, மண்டல பொதுச் செயலாளர் முருகானந்தம், தஞ்சை மாநகர செயலாளர் சுந்தரமோகன், மாவட்ட மகளிரணி செயலாளர் கலைவாணி, கமல்ஹாசன் நற்பணி மன்ற ஒருங்கிணைப்பாளர் தரும.சரவணன் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்