கோடியக்கரையில், மீனவரின் வலையில் சிக்கிய 110 கிலோ சுறா மீன் ரூ.26 ஆயிரத்துக்கு ஏலம் போனது

கோடியக்கரையில், மீனவரின் வலையில் 110 கிலோ எடையுள்ள சுறா மீன் சிக்கியது. இந்த மீன் ரூ.26 ஆயிரத்துக்கு ஏலம் போனது.

Update: 2020-12-29 04:39 GMT
வேதாரண்யம்,

நாகை மாவட்டம் வேதாரண்யத்தை அடுத்த கோடியக்கரையில் ஆண்டுதோறும் வடகிழக்கு பருவமழைக் காலம் தொடங்கி நடைபெறும் மீன்பிடி பருவம் சிறப்பு பெற்றது. அந்த வகையில் அக்டோபரில் தொடங்கும் மீன்பிடி பருவ காலமானது மார்ச் வரை நீடிப்பது வழக்கம். ஆண்டுதோறும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து நூற்றுக்கணக்கான படகுகளுடன் குடும்பம், குடும்பமாக கோடியக்கரைக்கு வரும் மீனவா்கள், தற்காலிகமாக முகாமிட்டு தங்குவா். இங்குள்ள படகுத்துறையில் பாதுகாப்பாக படகுகளை நிறுத்தி வைத்து மீன்பிடி தொழிலில் ஈடுபடுவா்.

110 கிலோ எடையுள்ள சுறா மீன்

இந்த ஆண்டு பருவம் அக்டோபரில் தொடங்கினாலும், அவ்வப்போது புயல் போன்ற காரணங்களால் மீன்பிடி தொழில் மந்தமாகவே இருந்து வந்தது.

இந்த நிலையில் வேதாரண்யம் தாலுகா கோடியக்கரையில் மீன் பிடிப்பில் ஈடுபட்டு இருந்த ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் மீனவரின் வலையில் 110 கிலோ எடையுள்ள பால் சுறா மீன் சிக்கியது.

ரூ.26 ஆயிரத்துக்கு ஏலம்போனது

இந்த மீன், சந்தைக்கு விற்பனைக்கு வந்தது. அப்போது நாகை மீன் வியாபாரி ஒருவர் அந்த சுறா மீனை ரூ.26 ஆயிரத்துக்கு ஏலம் எடுத்தார்.

மேலும் செய்திகள்