ஏரல் அருகே லாரி டிரைவர் கொலையில் அண்ணன்-தம்பி கைது பரபரப்பு வாக்குமூலம்

ஏரல் அருகே லாரி டிரைவர் கொலையில் அண்ணன்-தம்பியை போலீசார் கைது செய்தனர். அவர்கள் போலீசாரிடம் பரபரப்பு வாக்குமூலம் அளித்தனர்.

Update: 2020-12-29 03:30 GMT
ஏரல்,

தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே பண்டாரவிளை பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்தவர் ஞானையா மகன் செல்வகுமார் என்ற செல்லகுட்டி (வயது 40), லாரி டிரைவர். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர். செல்வகுமார் தனது மனைவியின் ஊரான ஏரலில் குடும்பத்தினருடன் வசித்து வந்தார்.

நேற்று முன்தினம் செல்வகுமார் தனது சொந்த ஊரான பண்டாரவிளைக்கு தனியாக சென்றார். பின்னர் மாலையில் அங்குள்ள அய்யனார்குட்டி கோவில் அருகில் உள்ள பனங்காட்டு பகுதியில் செல்வகுமார் அடித்துக்கொலை செய்யப்பட்ட நிலையில் பிணமாக கிடந்தார்.

அண்ணன்-தம்பி கைது

இதுகுறித்து ஏரல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், அதே ஊரைச் சேர்ந்த துரைப்பாண்டி மகன்கள் பட்டுபாண்டி (35), அருண்குமார் என்ற பெருமாள் (19) ஆகிய 2 பேரும் சேர்ந்து செல்வகுமாரை உருட்டு கட்டையால் தாக்கி கொலை செய்தது தெரிய வந்தது. பெருங்குளம் குளக்கரையில் பதுங்கி இருந்த பட்டுபாண்டி, அருண்குமார் ஆகிய 2 பேரையும் போலீசார் நேற்று கைது செய்தனர்.

கைதான பட்டுப்பாண்டி போலீசாரிடம் அளித்த பரபரப்பு வாக்குமூலத்தில் கூறி இருப்பதாவது:-

தம்பியை தாக்கிதால்...

நானும், தம்பி அருண்குமாரும் கொத்தனார்களாக வேலை செய்து வருகிறோம். என்னுடைய மற்றொரு தம்பி உத்திரகுமாரை கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு செல்வகுமார் அடித்து உதைத்து தாக்கினார்.

இதுதொடர்பான வழக்கு நிலுவையில் உள்ளது. எனது தம்பியை தாக்கிய செல்வகுமாரை பழிக்குப்பழி வாங்க காத்து இருந்தேன்.

இந்த நிலையில் பண்டாரவிளைக்கு வந்த செல்வகுமார், காட்டுப்பகுதிக்கு சென்று சிலருடன் சீட்டு விளையாடினார். உடனே அங்கு சென்ற நானும், தம்பி அருண்குமாரும் சேர்ந்து உருட்டு கட்டையால் செல்வகுமாரை சரமாரியாக அடித்துக் கொலை செய்தோம்.

இவ்வாறு பட்டுப்பாண்டி வாக்குமூலம் அளித்ததாக போலீசார் தெரிவித்தனர்.

கைதான பட்டுப்பாண்டி, அருண்குமார் ஆகிய 2 பேரையும் போலீசார் ஸ்ரீவைகுண்டம் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

மேலும் செய்திகள்