சங்கரன்கோவிலில் சோகம் கணவர் இறந்த துக்கத்தில் மூதாட்டி தூக்குப்போட்டு தற்கொலை

சங்கரன்கோவிலில் கணவர் இறந்த துக்கத்தில் மூதாட்டி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2020-12-29 03:11 GMT
சங்கரன்கோவில்,

சங்கரன்கோவில் வடக்கு ரத வீதியைச் சேர்ந்தவர் ராமையா. பூக்கட்டும் தொழிலாளி. இவருடைய மனைவி வேலம்மாள் (வயது 80). இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். அனைவருக்கும் திருமணமாகி, வெளியூர்களில் வசித்து வருகின்றனர்.

கடந்த 40 நாட்களுக்கு முன்பு ராமையா உடல்நலக்குறைவால் இறந்தார். இதனால் வேலம்மாள் மட்டும் தனது வீட்டில் தனியாக வசித்து வந்தார். கணவர் இறந்த துக்கத்தில் மனமுடைந்த நிலையில் இருந்த வேலம்மாள் நேற்று முன்தினம் இரவில் தனது வீட்டில் திடீரென்று தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

போலீசார் விசாரணை

நேற்று காலையில் நீண்ட நேரமாகியும் வேலம்மாள் வீட்டில் இருந்து வெளியே வராததால், அக்கம்பக்கத்தினர் அங்கு சென்று பார்த்தனர். அப்போது வேலம்மாள் தூக்கில் பிணமாக தொங்கியதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து சங்கரன்கோவில் டவுன் போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே போலீசார் விரைந்து சென்று, வேலம்மாளின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சங்கரன்கோவில் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சங்கரன்கோவிலில் கணவர் இறந்த துக்கத்தில் மூதாட்டி தற்கொலை செய்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்