வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு ரேஷன் அட்டையை மாற்றி தரக்கோரி மனு

வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு ரேஷன் அட்டையை மாற்றி வழங்க கோரி பொதுமக்கள் மனு அளித்தனர்.

Update: 2020-12-29 00:24 GMT
புதுக்கோட்டை,

புதுக்கோட்டை கலெக்டர் அலுவலகத்திற்கு நேற்று திங்கட்கிழமையில் மனுக்கள் அளிக்க பொதுமக்கள் ஏராளமானோர் வந்தனர். அவர்களை போலீசார் நுழைவுவாயிலில் தடுத்து நிறுத்தி மனுக்கள் அளிப்பதற்கான பெட்டியில் கோரிக்கை மனுக்களை வருவாய்த்துறை ஊழியர்கள் பெற்று செலுத்தினர். ஏம்பல் அருகே கிச்சிக்கோட்டை, மதகம், கறம்பவயல் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் பலர் தங்களது கையில் ரேஷன் கார்டுடன் வந்திருந்தனர். வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள தங்களுக்கு வறுமை கோட்டிற்கு மேல் உள்ளவர்கள் பயன்படுத்தும் ரேஷன் அட்டை (என்.பி.எச்.எச்.) கொடுக்கப்பட்டுள்ளது. இதனால் அரசு சலுகைகள் எதுவும் எங்களுக்கு கிடைப்பதில்லை. எனவே ரேஷன் அட்டையை மாற்றம் செய்து தர கோரி மனு அளித்தனர்.

விவசாயிகள் மனு

இதேபோல அரிமளம் ஊராட்சி ஒன்றிய பகுதிகளான புதுநிலைவயல், நல்லம்பாள் சமுத்திரம் பகுதிகளில் புரெவி புயல் மற்றும் தொடர் மழையின் காரணமாக 500 எக்டேரில் நெற்பயிரில் கழுத்துக்குலை நோய் மற்றும் இலைக்குலை நோய் தாக்குதல் ஏற்பட்டு பாதிக்கப்பட்டுள்ளது. எனவே அரசு நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதியை சேர்ந்த விவசாயிகள் சார்பில் மனு அளித்தனர். இதேபோல பொதுமக்கள் பலர் கோரிக்கைகள் தொடர்பாக மனுக்களை அளிக்க கலெக்டர் அலுவலகம் வந்திருந்தனர்.

ஊராட்சி மன்ற தலைவர்கள் மனு

இதேபோல மதகம், ஏம்பல், இரும்பநாடு, திருவாகுடி, குருக்களுர் ஆகிய ஊராட்சி மன்ற தலைவர்கள், தங்கள் பகுதியில் உள்ள வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள நபர்களுக்கு தகுதியான ரேஷன் அட்டை வழங்க கோரி கலெக்டர் உமாமகேஸ்வரியிடம் மனு அளித்தனர்.

மேலும் செய்திகள்