மும்பை சயான் பிரதிக்சா நகரில் அடுக்குமாடி கட்டிடத்தில் பயங்கர தீ; சிக்கியவர்கள் பத்திரமாக மீட்பு

சயான் பிரதிக்சா நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் பொருட்கள் எரிந்து நாசமாகின. மேலும் விபத்தில் சிக்கியவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

Update: 2020-12-29 00:12 GMT
அதிகாலையில் தீ விபத்து
மும்பை சயான் பிரதிக்சா நகர் பகுதியில் டி- 4 என்ற அடுக்குமாடி கட்டிடத்தில் 2-வது மாடியில் உள்ள வீட்டில் வசித்து வருபவர் அகஸ்டின். நெல்லை மாவட்டம் கூந்தன்குளத்தை சேர்ந்தவர். தனது குடும்பத்துடன் வசித்து வந்த இவர் வேலை விஷயமாக நேற்று முன்தினம் இரவு வெளியே சென்றிருந்தார்.

அவரது வீட்டில் மனைவி ஷீலா, குழந்தைகள் மற்றும் விருந்தினர்கள் என 6 பேர் இருந்தனர். இந்த நிலையில் நேற்று அதிகாலை 4.32 மணி அளவில் பிரிட்ஜில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டது.

பரவியது
இதனால் வீட்டின் மின்வயர்களில் தீ பற்றி எரிய தொடங்கியது. அதிகாலை நேரத்தில் அனைவரும் அயர்ந்து தூங்கி கொண்டிருந்தால் தீ விபத்தை உணர முடியவில்லை. இதனால் அங்கு பற்றிய தீ மள மள வென பரவி பொருட்களின் மீது பற்றி எரிய தொடங்கியது.

கரும்புகை ஏற்பட்டதால் வீட்டில் இருந்தவர்களுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இதனால் திடுக்கிட்டு எழுந்து வீட்டில் இருந்த அனைவரும் பத்திரமாக வெளியேறினர். இது பற்றி தகவல் அறிந்த தீயணைப்பு படையினர் 8 வாகனங்களில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.

பொருட்கள் எரிந்து நாசம்
கரும்புகை காரணமாக மாடியில் சிக்கி இருந்த சிலரை மீட்டு பத்திரமாக வெளியே அழைத்து வந்தனர். பின்னர் அங்கு பற்றிய தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். காலை 7 மணி அளவில் அங்கு பற்றிய தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த தீ விபத்தில் வீட்டில் இருந்த நகைகள், துணிமணிகள், கட்டில், மரச்சாமான்கள், பாத்திரங்கள் உள்பட பலபொருட்கள் தீயில் எரிந்து நாசமானது. இந்த தீ விபத்தில் யாரும் காயமடையவில்லை என போலீசார் தெரிவித்தனர்.

இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து தீ விபத்திற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

எம்.எல்.ஏ நேரில் ஆறுதல்
தீ விபத்து பற்றி அறிந்த சயான் கோலிவாடா பா.ஜனதா எம்.எல்.ஏ.கேப்டன் தமிழ்செல்வன், பா.ஜனதா துணைத்தலைவர் சிவா வெற்றிவேல் மற்றும் ஆதரவாளர்கள் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று பார்வையிட்டனர். மேலும் தீ விபத்து குறித்து பாதிக்கப்பட்ட ஷீலாவிடம் கேட்டறிந்து ஆறுதல் கூறினர்.

மேலும் செய்திகள்