இங்கிலாந்தில் இருந்து கர்நாடகம் வந்தவர்களில் தலைமறைவானவர்களை கண்டுபிடிக்க போலீஸ் மூலம் நடவடிக்கை; சுகாதாரத்துறை மந்திரி சுதாகர் பேட்டி
இங்கிலாந்தில் இருந்து கர்நாடகம் வந்தவர்களில் தலைமறைவானவர்களை கண்டுபிடிக்க போலீஸ் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை மந்திரி சுதாகர் கூறினார்.
கர்நாடக சுகாதாரத்துறை மந்திரி சுதாகர் பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
26 பேருக்கு வைரஸ்
இங்கிலாந்தில் இருந்து திரும்பியவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதில் நேற்று (நேற்று முன்தினம்) வரை 26 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. அவர்களை தாக்கியுள்ள வைரஸ் புதிய வகையை சேர்ந்ததா? என்பதை கண்டறியும் சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அந்த சோதனை பெங்களூருவில் உள்ள நிமான்ஸ் மருத்துவமனை ஆய்வகத்தில் நடத்தப்பட்டு வருகிறது. அதன் முடிவுகள் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலிடம் (ஐ.சி.எம்.ஆர்.) நிமான்ஸ் மருத்துவமனை வழங்கும்.
மேலும் இங்கிலாந்தில் இருந்து திரும்பியவர்களில் சிலரின் தொடர்பு கிடைக்கவில்லை. அவர்கள் தலைமறைவாகியுள்ளனர். இதுகுறித்து போலீஸ் துறை மந்திரியிடம் கூறியுள்ளேன். அடுத்த 2 நாட்களில் தலைமறைவானர்களை கண்டுபிடிப்பதாக போலீஸ் மந்திரி பசவராஜ் பொம்மை உறுதி அளித்துள்ளார். புத்தாண்டை மிக எளிமையாக கொண்டாட முடிவு செய்யப்பட்டுள்ளது.
வழிகாட்டு நெறிமுறைகள்
இது தொடர்பாக பெங்களூரு மற்றும் மாநிலத்தின் பிற பகுதிகளுக்கு தனித்தனியாக வழிகாட்டு நெறிமுறைகள் இன்று (நேற்று) மாலை வெளியிடப்பட உள்ளன. யாரும் விதிமுறைகளை மீறக்கூடாது. சுகாதாரத்துறை சார்பில் சில ஆலோசனைகளை போலீஸ் துறைக்கு வழங்கியுள்ளோம். அந்த ஆலோசனைகள் வழிகாட்டுதலில் இடம் பெறும்.
மரண விகிதம் குறைகிறது
இங்கிலாந்தில் இருந்து வந்தவர்களில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ள 26 பேரும் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். அவர்களின் உடல்நிலை நல்ல நிலையில் உள்ளது. அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர்களுக்கு லேசான பாதிப்பு இருக்கிறது. கர்நாடகத்தில் பள்ளிகளை திறப்பது குறித்து பள்ளி கல்வித்துறை மந்திரியுடன் நான் ஆலோசனை நடத்த உள்ளேன். புதிய வகை கொரோனா வைரசை கண்டு பொதுமக்கள் பயப்பட தேவை இல்லை. வைரஸ் தொற்று பரவலும், மரண விகிதமும் குறைந்து வருகிறது. கடந்த சில நாட்களில் சில மாவட்டங்களில் உயிரிழப்பு பதிவாகவில்லை.
இங்கிலாந்தில் இருந்து வந்தவர்கள் பெங்களூருவில் தான் உள்ளனர். அதனால் பள்ளிகளை திறப்பதில் எந்த பிரச்சினையும் இல்லை. கொரோனா தடுப்பூசி வினியோக விஷயத்தில் நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி பரிசளிக்க உள்ளார். கொரோனா தடுப்பூசி 3-வது கட்ட சோதனை நல்ல நிலையில் சென்று கொண்டிருக்கிறது. தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களின் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்துள்ளது. 96 சதவீதம் பேருக்கு எந்த வித பக்க விளைவுகளும் ஏற்படவில்லை.
இவ்வாறு சுதாகர் கூறினார்.