விஸ்ட்ரான் தொழிற்சாலை இன்னும் 20 நாட்களில் மீண்டும் செயல்படும்; மந்திரி சிவராம் ஹெப்பார் பேட்டி
விஸ்ட்ரான் தொழிற்சாலை இன்னும் 20 நாட்களில் மீண்டும் செயல்படும் என்று மந்திரி சிவராம் ஹெப்பார் கூறினார்.
தொழிற்சாலையில் வன்முறை
கோலார் அருகே நரசாப்பூர் பகுதியில் விஸ்ட்ரான் என்ற பெயரில் செல்போன் தயாரிக்கும் தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. இந்த தொழிற்சாலை தைவான் நாட்டை சேர்ந்தது ஆகும். இந்த தொழிற்சாலையில் சுமார் 10 ஆயிரம் ஊழியர்கள் வேலை செய்து வருகிறார்கள். இந்த நிலையில் தொழிற்சாலை நிர்வாகம் சார்பில் ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கப்படவில்லை என்று தெரிகிறது. இதனை கண்டித்து ஊழியர்கள் நடத்திய போராட்டத்தின் போது வன்முறை வெடித்தது.
தொழிற்சாலையில் உள்ள பொருட்களை ஊழியர்கள் அடித்து நொறுக்கினர். செல்போன்களையும் திருடி சென்றுஇருந்தனர். மேலும் வாகனங்களுக்கும் தீ வைக்கப்பட்டன. இதுகுறித்து வேம்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து 140-க்கும் மேற்பட்டவர்களை கைது செய்தனர். இந்த வன்முறையில் ரூ.437 கோடி மதிப்பிலான பொருட்கள் சேதம் அடைந்தன. இந்த வன்முறை சம்பவம் உலகளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
20 நாட்களில்....
இந்த நிலையில் கர்நாடக தொழிலாளர் துறை மந்திரி சிவராம் ஹெப்பார் நேற்று விஸ்ட்ரான் தொழிற்சாலை அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
விஸ்ட்ரான் தொழிற்சாலை நிர்வாக அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி உள்ளேன். அந்த தொழிற்சாலை இன்னும் 20 நாட்களில் மீண்டும் செயல்பட தொடங்கும். மூத்த அதிகாரியை தொடர்புகொண்டு என்னால் பேச முடியவில்லை. இதனால் வன்முறை குறித்து சில விஷயங்கள் இன்னும் தெளிவாக தெரியவில்லை. தொழிற்சாலை மற்றும் அதில் பணியாற்றும் ஊழியர்களுக்கு இடையே கர்நாடக தொழிலாளர் துறை பாலமாக இருந்து செயல்படும். ஊழியர்களுக்கு அநீதி இழைக்கப்படுவதை ஒரு போதும் ஏற்றுக்கொள்ள மாட்டோம்.
விஸ்ட்ரான் தொழிற்சாலை பிரச்சினை எங்களது கவனத்திற்கு முன்கூட்டியே கொண்டு வரவில்லை. பிரச்சினையை எங்களிடம் தெரிவித்துஇருந்தால் பேசி சரிசெய்து இருப்போம். அதிக முதலீடுகளை ஈர்ப்பதற்கும், உள்ளூர் மக்களுக்கு வேலை கிடைக்கவும் தொழிற்கொள்கை எளிமைப்படுத்தப்படும். விஸ்ட்ரான் தொழிற்சாலை வன்முறையில் ஈடுபட்ட ஊழியர்களை பணி நீக்கம் செய்ய முடிவு எடுத்து உள்ளது. அதே நேரம் வன்முறையில் ஈடுபடாத ஊழியர்களை மறுபடியும் பணியில் சேர்த்து கொள்ளும்.
இவ்வாறு அவர் கூறினார்.