ஆரணி ஆற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டதால் பொதுமக்கள் சிரமம்: ஊத்துக்கோட்டை தரைப்பாலம் சீரமைப்பு பணிகள் தீவிரம்

ஊத்துக்கோட்டையில் ஆரணி ஆற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட தரைப்பாலத்தை சீரமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகின்றது.

Update: 2020-12-28 21:15 GMT
ஊத்துக்கோட்டை ஆரணி ஆற்றில் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட தரைப்பாலத்தை சீர்செய்யும் பணி
தரைப்பாலம் சேதம்
‘நிவர்’ புயல் காரணமாக ஊத்துக்கோட்டை சுற்றுவட்டார பகுதிகளில் மற்றும் ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் பிச்சாட்டூரில் உள்ள ஆரணியார் அணை நீர்பிடிப்பு பகுதியில் பலத்த மழை பெய்தது.

இதன் காரணமாக அணை முழுவதுமாக நிரம்பியதால், கடந்த மாதம் 25-ந் தேதி ஆரணி ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்பட்டது.

வினாடிக்கு 11 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டதால் ஊத்துக்கோட்டை ஆரணி ஆற்றில் இருந்த தரைப்பாலம் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது.

இதன் காரணமாக ஊத்துக்கோட்டை, திருவள்ளூர் மற்றும் இதர பகுதிகளுக்கு வாகன போக்குவரத்து ரத்து செய்யப்பட்டது. மேலும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட தரைப் பாலம் அருகே ரூ.28 கோடி செலவில் கட்டப்பட்டு வரும் புதிய பாலம் மீது தற்காலிக படிகள் அமைத்து அதன் மூலம் பொதுமக்கள் நடந்து செல்வதற்கு அனுமதி வழங்கப்பட்டது.

சீரமைப்பு தீவிரம்
மோட்டார் சைக்கிள்கள் மற்றும் இதர வாகனங்களில் வரும் வாகன ஓட்டிகள் மாற்றுப்பாதையில் கூடுதல் நேரம் பயணம் செய்து திருவள்ளூர் மற்றும் இதர பகுதிகளுக்கு சென்று வந்தனர். இந்த நிலையில் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட தரைப்பாலத்தின் கிழக்கு திசையில் தற்காலிக சாலை அமைக்கப்பட்டது.

இதன் வழியாக கடந்த 25-ந் தேதி முதல் வாகன ஓட்டிகள் சென்று வருகின்றன. ஆனாலும் பஸ்கள், லாரிகள் செல்ல அனுமதிக்கப்படவில்லை. இந்நிலையில் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட தரைப்பாலம் பகுதியை சீரமைக்கும் பணிகள் நேற்று தொடங்க நடைபெற்று வருகின்றன. முதற்கட்டமாக ராட்சத குழாய்கள் அமைக்கும் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. இந்தப் பணிகள் முடிவடைந்த பிறகு ராட்சத குழாய்கள் மேல் சாலை அமைக்கப்படும். அதன் பின்னர் பஸ்கள் மட்டும் லாரிகள் செல்ல அனுமதிக்கப்படும் என்று தேசிய சாலை துறை உதவி கோட்ட பொறியாளர் சிவகுமார் தெரிவித்தார்.

மேலும் செய்திகள்