காரை பறிமுதல் செய்ததால் ஆத்திரம்: போலீஸ் ஜீப்பை கடத்திய போதை டாக்டர் கைது; சென்னையில் பரபரப்பு சம்பவம்

சென்னையில் காரை பறிமுதல் செய்த ஆத்திரத்தில், போலீஸ் ஜீப்பை கடத்தி சென்ற போதை டாக்டர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

Update: 2020-12-28 20:13 GMT
டாக்டர் முத்து விக்னேஷ்
போதை டாக்டர்
கைது செய்யப்பட்ட போதை டாக்டரின் பெயர் முத்து விக்னேஷ் (வயது 31). இவர் எம்.பி.பி.எஸ். எம்.டி. படித்தவர். ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தை சேர்ந்தவர். சென்னை குன்றத்தூரில் உள்ள தனியார் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் டாக்டராக பணி செய்கிறார். திருமணம் ஆகாதவர். சென்னை முகப்பேர் கிழக்கு பகுதியில் ஒரு வாடகை வீட்டில் தனியாக வசிக்கிறார். நேற்று முன்தினம் நள்ளிரவில், டாக்டர் முத்துவிக்னேஷ் குடிபோதையில் கீழ்ப்பாக்கம் பகுதியில் தனது காரை ஓட்டி வந்துள்ளார்.

சென்னை கீழ்பாக்கம் டெய்லர்ஸ் சாலை பகுதியில் போக்குவரத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சிவசங்கரன், போலீஸ்காரர் சுந்தர் ஆகியோர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது போதையில் காரை ஓட்டி வந்த டாக்டர் முத்துவிக்னேசை மடக்கி பிடித்தனர். அவர் மீது குடிபோதையில் காரை ஓட்டியதாக வழக்குப்பதிவு செய்து கார் பறிமுதல் செய்யப்பட்டது.

பழிக்குப்பழி வாங்க...
பின்னர் அவரை ஒரு ஆட்டோவில் ஏற்றி அனுப்பி வைத்தனர். மறுநாள் காலையில் வந்து காரை எடுத்துச்செல்லுங்கள் என்று போலீசார் தெரிவித்தனர். ஆனால் ஆட்டோவில் இருந்து இறங்கிய டாக்டர் நடந்து சென்றார். எனது காரை வாங்காமல் போகமாட்டேன் என்று சாலையில் நடந்தபடி இருந்துள்ளார். ஈகா தியேட்டர் அருகே போக்குவரத்து போலீசாரின் ரோந்து ஜீப் நின்றுள்ளது.

தனது காரை பறிமுதல் செய்த போலீசாரை பழிவாங்க நினைத்த போதை டாக்டர் முத்து விக்னேஷ், திடீரென்று போலீஸ் ஜீப்பை ‘ஸ்டார்ட்’ செய்து வேகமாக ஓட்டி கடத்தி சென்றார். இதனால் அதிர்ச்சி அடைந்த போக்குவரத்து போலீசார் அந்த வழியாக வந்த காரில் ஏறி பின்னால் விரட்டி சென்றனர். கெங்கு ரெட்டி சுரங்கப்பாதையில் வைத்து, டாக்டர் முத்துவிக்னேசை மடக்கிப் பிடித்தனர். அவரிடம் இருந்து போலீஸ் ஜீப் மீட்கப்பட்டது.

கைது-சிறை
பின்னர் டாக்டர் முத்துவிக்னேஷ், கீழ்ப்பாக்கம் போலீஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டார். அவர் மீது போலீசாரை பணி செய்யவிடாமல் தடுத்ததாக கீழ்ப்பாக்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகேசன் வழக்குப்பதிவு செய்தார்.

இதனையடுத்து டாக்டர் கைது செய்யப்பட்டு, நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டார்.

மேலும் செய்திகள்