9 மாதத்திற்கு பிறகு ராமேசுவரம் கோவிலில் சாமி புறப்பாடு - தடையால் பக்தர்கள் ஏமாற்றம்
9 மாதத்திற்கு பிறகு ராமேசுவரம் கோவிலில் சாமி புறப்பாடு நடந்தது. பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டதால் ஏமாற்றம் அடைந்தனர்.
ராமேசுவரம்,
கொரோனா தடுப்பு ஊரடங்கு தளர்வை தொடர்ந்து தமிழகம் முழுவதும் உள்ள கோவிலுக்குள் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வழக்கம்போல் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். ராமேசுவரம் கோவிலில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டு வந்தாலும் கோவில் திறந்து 4 மாதத்திற்கு மேலாகியும் பிரதோஷ நாளன்று பிரதோஷ பூஜை நடைபெறும் நேரத்தில் பக்தர்கள் சாமியுடன் சுற்றி வருவதற்கும் தரிசனம் செய்வதற்கும் தடை நீடித்து வருகிறது. தமிழகம் முழுவதும் உள்ள கோவில்களில் பிரதோஷ நேரத்தில் சாமி தரிசனம் செய்ய பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் 9 மாதத்திற்கு பிறகு மார்கழி மாத பிரதோஷத்தையொட்டி ராமேசுவரம் ராமநாதசாமி கோவிலில் நேற்று சாமி தங்க ரிஷப வாகனத்தில் எழுந்தருளி சாமி புறப்பாடு நிகழ்ச்சி நடந்தது.. வாகனத்தை குருக்கள் சுமந்தபடி 3-ம் பிரகாரத்தை சுற்றி வலம் வந்தனர். தொடர்ந்து கருவறையில் உள்ள சாமிக்கு பிரதோஷ பூஜை நடைபெற்றது.
பிரதோஷ பூஜை நடைபெற்ற சுமார் 45 நிமிடத்திற்கும் மேலாக ராமேசுவரம் கோவிலுக்குள் பக்தர்கள் அனுமதிக்கப்படாமல் கோவில் ரத வீதி வாசலிலேயே நிறுத்தி வைக்கப்பட்டடு இருந்தனர். இதனால் பிரதோஷ பூஜையை காணமுடியாமல் உள்ளூர் மற்றும் வெளியூரை சேர்ந்த பக்தர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து கோவில்களிலும் பக்தர்கள் அனைத்து சன்னதிகளுக்கும் தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டு வருவதோடு பிரதோஷ நேரத்திலும் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். ஆனால் ராமேசுவரம் கோவிலில் உள்ள அதிகாரிகள் மட்டும் பக்தர்களை தரிசனம் செய்ய விடாமல் தடைவிதித்து வருகின்றனர் என்று பக்தர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.