வாணியம்பாடியில் தொழிலாளர் நல வாரிய உறுப்பினர் சேர்க்கை அமைச்சர் நிலோபர்கபில் தொடங்கி வைத்தார்
வாணியம்பாடி நகராட்சி புதூர், சென்னாம்பேட்டை பகுதியில் தொழிலாளர் நல வாரிய உறுப்பினர்கள் சேர்க்கை சிறப்பு முகாம் அமைச்சர் நிலோபர்கபீல் தொடங்கி வைத்தார்.
வாணியம்பாடி,
வாணியம்பாடி புதூரில் உள்ள நகராட்சி தொடக்க பள்ளியில் நடைபெற்ற சிறப்பு முகாமிற்கு நகர கூட்டுறவு வங்கி இயக்குநர் ஜி.சதாசிவம் தலைமை தாங்கினார். கூட்டுறவு வீட்டு வசதி சங்கத் தலைவர் அப்துல்சுபான், நகர கூட்டுறவு வங்கி துணைத் தலைவர் தென்னரசு, முன்னாள் நகர்மன்ற உறுப்பினர்கள் மாலதி, மகேஷ்வரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிலோபர்கபில் கலந்து கொண்டு, தொழிலாளர் நல வாரியத்தில் புதிய உறுப்பினர்கள் சேர்க்கை குறித்தும், அதில் உள்ள திட்டங்கள் குறித்தும் பொதுமக்களிடம் விளக்கி பேசினார். தொடர்ந்து அங்கு நல வாரிய உறுப்பினர்கள் சேர்க்கைக்கான படிவங்களை பெற்றுக் கொண்டார். இதே போல் சென்னாம்பேட்டை பகுதியிலும் உறுப்பினர் சேர்க்கைக்கான படிவங்கள் பெற்றுக் கொள்ளப்பட்டது. நிகழ்ச்சிகளில் உதயேந்திரம் முன்னாள் பேரூராட்சி உறுப்பினர் ஆர்.சரவணன், காதர்பேட்டை கோவிந்தன் உள்பட பலர் கலந்துக் கொண்டனர்.