வடிகால் இல்லாததால் வடியாத வெள்ளம் மழைவிட்டும் குடியிருப்பு வாசிகளின் துயரம் நீங்கவில்லை
கடலூரில் வடிகால் இல்லாததால் வெள்ளம் வடியாமல் உள்ளது. மழைவிட்டும் குடியிருப்பு வாசிகளின் துயரம் இன்னும் நீங்கவில்லை.
கடலூர்,
வங்க கடலில் அடுத்தடுத்து உருவான நிவர் மற்றும் புரெவி புயல்களால் கடலூர் மாவட்டத்தில் இடைவிடாது மழை கொட்டி தீர்த்தது. இதனால் தாழ்வான பகுதியில் உள்ள குடியிருப்புகள் அனைத்தும் வெள்ளத்தில் மிதந்தன. குடியிருப்புகளை சுற்றியுள்ள மழைநீரை வடிய வைக்கும் பணியில் அதிகாரிகள் முழுவீச்சில் ஈடுபட்டனர்.
கடலூர் நகராட்சி பகுதியில் மோட்டார் மூலம் மழைநீரை ஊழியர்கள் வடிய வைத்தனர். சில இடங்களில் சாலைகளை வெட்டி கால்வாய் அமைத்து தண்ணீரை வடிய வைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இதேபோல் கடலூர் கோண்டூர் ஊராட்சிபகுதியிலும் தேங்கி நின்ற மழைநீர் அகற்றும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டனர். ஆனால் தாழ்வான பகுதியான ராகவேந்திரா நகர் பகுதியில் இது வரை மழைநீர் வடியவில்லை.
நகரை சுற்றிலும் தண்ணீர் குளம் போல் தேங்கி நிற்கிறது. போதிய வடிகால் வசதியில்லாமல், தண்ணீரை வடிய வைக்க முடியவில்லை. இதனால் அந்த நகரை சேர்ந்த மக்கள் தண்ணீரில் நடந்து செல்ல முடியாமலும், வாகனங்களில் செல்ல முடியாமலும் அவதிப்பட்டு வருகின்றனர். முட்டளவு தண்ணீரில் சிறுவர்கள் நனையாமல் இருக்க லாாி டியூப் மூலம் நீந்தி வெளியே வருகின்றனர். இளைஞர்களும் டியூப்பில் பலகைகளை வைத்து பாதுகாப்புடன் வெளியே வருகின்றனர்.
மழை ஓய்ந்த பிறகும் இதே நிலை நீடித்து வருவதால் அப்பகுதி மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கி உள்ளது. இந்த பகுதியில் உள்ள மழைநீரை வடிய வைக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை வைத்து வருகின்றனர். ஆனால் அதிகாரிகள் வருவதும், போவதுமாக இருக்கிறார்கள். ஆனால் தண்ணீரை வடிய வைக்க எவ்வித முயற்சியும் எடுக்கவில்லை என்று குற்றம் சாட்டி வருகின்றனர்.
ஆகவே இதை ஊராட்சி நிர்வாகம் கவனத்தில் கொண்டு தேங்கி நிற்கும் மழைநீரை வடிய வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் நீண்ட நாட்கள் தண்ணீர் தேங்கி நிற்பதால் சுகாதார சீர்கேடு ஏற்படவும் வாய்ப்பு உள்ளது. எனவே இதை மாவட்ட நிர்வாகம் கவனித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்களும் கோரிக்கை வைத்துள்ளனர்.
இதேபோல் கடலூர் நகரில் இன்னும் பல்வேறு இடங்களில் மழைநீர் தேங்கி நின்று தூர்நாற்றம் வீசி வருவதால் சுகாதார சீர்கேடு ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் மழைவிட்டும் கடலூர் மக்களின் துயரம் இதுநாள் வரைக்கும் ஓயாமல் இருந்து வருகிறது.