மசினகுடி அருகே காயம் அடைந்த காட்டு யானை ஊருக்குள் புகுந்து அட்டகாசம்

மசினகுடி அருகே காயத்துடன் சுற்றி வரும் காட்டு யானை ஊருக்குள் புகுந்து அட்டகாசம் செய்தது.

Update: 2020-12-28 13:05 GMT
கூடலூர், 

கூடலூர் மற்றும் முதுமலை புலிகள் காப்பகத்தின் வெளிமண்டல பகுதியான மசினகுடியில் காயத்துடன் 2 காட்டு யானைகள் சுற்றி வருகிறது. அதில் ஒரு யானை இடம்பெயர்ந்து செல்வதால் அதற்கு சிகிச்சை அளிப்பதில் காலதாமதம் ஏற்பட்டு வருகிறது.

மற்றொரு யானைக்கு பழங்களுக்குள் மருந்தை வைத்து காட்டுயானைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. அந்த யானை வனப்பகுதிக்குள் சென்றுவிட்டது. அதில் ஒரு யானை மட்டும் குடியிருப்புக்குள் புகுந்து வருவதால் பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்று வனத்துறையினர் அறிவித்து உள்ளனர்.

இந்த நிலையில் நேற்று அதிகாலை மசினகுடி அருகே தொட்டி லிங்க் கிராமத்துக்குள் காயமடைந்த காட்டு யானை புகுந்து அட்டகாசத்தில் ஈடுபட்டது. இதனால் பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே வர முடியாமல் அச்சம் அடைந்தனர். தொடர்ந்து அப்பகுதியில் வளர்ந்திருந்த வாழை உள்ளிட்ட பயிர்களை தின்று சேதப்படுத்தியது.

இதை அறிந்த சிங்காரா வனச்சரகர் காந்தன் தலைமையிலான வனத்துறையினர் விரைந்து வந்து காட்டு யானையை கண்காணித்தனர். தொடர்ந்து காலை 9 மணி வரை அப்பகுதியில் சுற்றி வந்த காட்டு யானை வனப்பகுதிக்குள் சென்றது. அதன் பின்னரே பொது மக்கள் நிம்மதி அடைந்தனர்.

மேலும் செய்திகள்