தனி விமானம் தரையிறங்க அனுமதி மறுப்பு: ஹெலிகாப்டரில் திருச்சி வந்த கமல்ஹாசன்

தனி விமானம் தரையிறங்க அனுமதி மறுக்கப்பட்டதால் கமல்ஹாசன் நேற்று திருச்சிக்கு ஹெலிகாப்டரில் வந்தார்.;

Update:2020-12-28 07:19 IST
செம்பட்டு,

மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் தேர்தல் பிரசாரத்தை மதுரையில் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு தொடங்கினார். அதனை தொடர்ந்து சென்னையில் 2-ம் கட்ட தேர்தல் பிரசாரத்தை மேற்கொண்டார்.

இதையடுத்து 3-ம் கட்ட தேர்தல் பிரசாரத்துக்காக நேற்று மதியம் 12 மணிக்கு சென்னையிலிருந்து கமல்ஹாசன் தனி விமானம் மூலம் திருச்சிக்கு வருவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. ஆனால் திருச்சி விமான நிலையத்தில் காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை ஓடுதள பாதையை பலப்படுத்தும் பணி நடந்து கொண்டிருப்பதால் அவரது தனி விமானம் திருச்சி விமான நிலையத்தில் இறங்குவதற்கு அனுமதி மறுக்கப்பட்டது.

ஹெலிகாப்டரில் வந்தார்

இதனைத் தொடர்ந்து கமல்ஹாசன் சென்னையில் இருந்து தனி விமானத்தில் மதுரைக்குச்சென்றார். பின்னர் அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் திருச்சிக்கு வந்தார். திருச்சியில் அவரது ஹெலிகாப்டர் விமான நிலையம் அருகில் உள்ள தனியார் குடியிருப்பு பகுதியில் அமைக்கப்பட்டிருந்த ஹெலிபேடில் பிற்பகல் 2.35 மணிக்கு தரையிறங்கியது.

அப்போது அங்கு திரண்டு இருந்த அவருடைய கட்சி பிரமுகர்கள் மற்றும் ரசிகர்கள் தெய்வமே வாழ்க என கோஷம் எழுப்பினார்கள். ஹெலிகாப்டரில் இருந்து இறங்கிய கமல்ஹாசனுக்கு கட்சியின் மாநில துணை தலைவர் மகேந்திரன், பொதுச்செயலாளர் முருகானந்தம் ஆகியோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.

கண்ணாடி உடைந்தது

கமல்ஹாசனுடன் அவரது மகள் அக்்ஷரா ஹாசனும் வந்திருந்தார். இதனை தொடர்ந்து கமல்ஹாசன் ஹெலிபேட் தளத்தை சுற்றி நின்ற தொண்டர்கள் மற்றும் ரசிகர்களிடையே சென்று வணக்கம் தெரிவித்தார். பின்னர் பிரசார வேனில் ஏறி நின்று அவர்களை பார்த்து கும்பிட்டு வணக்கம் தெரிவித்தார். ‌அதன்பின்னர் வயர்லெஸ் ரோடு, கே.கே.நகர், சுந்தர் நகர் சுப்பிரமணியபுரம் வழியாக திறந்த வேனில் தனியார் ஓட்டலுக்கு சென்றார்.

எந்த இடத்திலும் அவர் பேசவில்லை. தொண்டர்களை பார்த்து கையசைத்து வணக்கம் மட்டுமே தெரிவித்தார். ஓட்டல் வாசலில் கமல்ஹாசனை பார்ப்பதற்காக அவரது ரசிகர்களும், தொண்டர்களும் முண்டியடித்துக் கொண்டு வந்தனர்.

இதனால் ஓட்டல் வாசலில் இருந்த கண்ணாடி உடைந்து நொறுங்கியது‌. இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்