பெரம்பலூர் பகுதியில் கோவில்களில் சனிப்பெயர்ச்சி விழா திரளான பக்தர்கள் வழிபாடு

பெரம்பலூர் பகுதியில் உள்ள கோவில்களில் சனிப்பெயர்ச்சி விழா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர்.

Update: 2020-12-27 23:26 GMT
பெரம்பலூர்,

நவக்கிரகங்களில் ஒன்றான சனிபகவான் நேற்று அதிகாலை 4.49 மணியளவில் தனுசு ராசியில் இருந்து மகர ராசிக்கு பெயர்ச்சியானார். இதையொட்டி பெரம்பலூரில் உள்ள பிரசித்தி பெற்ற பிரம்மபுரீஸ்வரர் உடனுறை அகிலாண்டேஸ்வரி கோவிலில் நேற்று சனிப்பெயர்ச்சி விழா நடைபெற்றது. இதில் கோவிலில் உள்ள நவக்கிரக சன்னதியில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள சனிபகவானுக்கு விநாயகர் பூஜை, அனுக்கை, கும்ப பூஜை, திரவியஹோமம், பூர்ணாகுதி ஆகியவை நடைபெற்று, தீபாராதனை காட்டப்பட்டது. இதைத்தொடர்ந்து சனிபகவானுக்கு பால், பழங்கள், வாசனை திரவியங்களை கொண்டு அபிஷேகங்களும், மகாதீபாராதனையும் நடந்தது.

பின்னர் மகா அபிஷேகம், கலசதீர்த்த அபிஷேகமும், அதனைத்தொடர்ந்து மகாதீபாராதனையும் நடந்தது. இந்த நிகழ்ச்சிகளின்போது பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை. இந்த நிகழ்ச்சிகள் நிறைவடைந்த பின்னரே வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்ய பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். விழாவை முன்னிட்டு யாக பூஜைகளை திருச்செங்கோடு சுவாமிநாத சிவாச்சாரியார் குழுவினர் நடத்தினார். இதற்கான ஏற்பாடுகளை தர்மபரிபாலன சங்கத்துடன் இணைந்து இந்துசமய அறநிலையத்துறை அலுவலர்கள், பிரம்மபுரீஸ்வரர் கோவில் நிர்வாகத்தினர் மற்றும் திருக்கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர்.

சிறப்பு அபிஷேகம்

இதேபோல் சனிப்பெயர்ச்சியை முன்னிட்டு பெரம்பலூர், எளம்பலூர் சாலையில் உள்ள பாலமுருகன் கோவிலில் நவக்கிரக சன்னதியில் சனி பகவானுக்கு அபிஷேகங்களும், மகாதீபாராதனையும் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர். துறைமங்கலத்தில் உள்ள சொக்கநாதர் உடனுறை மீனாட்சி கோவிலில் சனிப்பெயர்ச்சியை யொட்டி நவக்கிரக சன்னதியில் சிறப்பு யாகமும், சனிபகவானுக்கு அபிஷேக, ஆராதனையும் நடந்தது.

பெரம்பலூரை அடுத்த குரும்பலூரில் உள்ள தர்மசம்வர்த்தினி சமேத பஞ்சநதீஸ்வரர் கோவிலில் சனி பகவானுக்கு வாசனை திரவியங்கள் உள்பட சோடச அபிஷேகங்களும், மகாதீபாராதனையும் நடந்தது. இதில் பக்தர்கள் கலந்து கொண்டு சனிபகவானை வழிபட்டனர்.

மேலும் செய்திகள்