அரியலூர் பகுதியில் கோவில்களில் சனிப்பெயர்ச்சியை முன்னிட்டு சிறப்பு பூஜை

அரியலூர் பகுதியில் உள்ள கோவில்களில் சனிப்பெயர்ச்சியை முன்னிட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது.

Update: 2020-12-27 23:20 GMT
மீன்சுருட்டி,

அரியலூர் மாவட்டத்தில் நவக்கிரகங்கள் உள்ள கோவில்களில் நேற்று சனிப்பெயர்ச்சியை முன்னிட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில் அரியலூாில் கைலாசநாதர் கோவில், ஐந்து முக விநாயகர் கோவில், காசி விஸ்வநாதர் கோவில் உள்ளிட்ட கோவில்களில் சிறப்பு யாகங்கள் மற்றும் பூஜைகள் நடைபெற்றன.

மீன்சுருட்டியை அடுத்த கங்கை கொண்ட சோழபுரத்தில் உள்ள பிரசித்தி பெற்ற பிரகதீஸ்வரர் கோவிலில் நவக்கிரக பீடம், ஒரே கல்லில் அமைந்துள்ளது. இதில் சனிபகவான், 7 குதிரைகள் பூட்டிய ரதத்தை மேற்கு முகமாக செலுத்துவது போன்று உள்ளது. நேற்று இக்கோவிலில் சனிப்பெயர்ச்சி விழா நடைபெற்றது. தனசு ராசியில் இருந்து மகர ராசிக்கு நேற்று அதிகாலை 4.49 மணிக்கு சனிபகவான் இடம் பெயர்ந்ததை தொடர்ந்து நவக்கிரகத்திற்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, மகா தீபாராதனை நடைபெற்றது. இதில் சனி பகவானுக்கு பால், தயிர், தேன், மஞ்சள், சந்தனம் உள்ளிட்டவற்றால் அபிஷேகமும், யாகத்தில் வைத்து பூஜை செய்யப்பட்ட புனிதநீரால் அபிேஷகமும் நடைபெற்றது. இதையடுத்து சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகாதீபாராதனை காட்டப்பட்டது.

பக்தர்கள் வழிபாடு

இதில் பரிகாரங்கள் செய்து பலன் பெற வேண்டிய ராசிக்காரர்கள் பரிகார பூஜை செய்து வழிபட்டனர். மேலும் ஜெயங்கொண்டம் எம்.எல்.ஏ. ராமஜெயலிங்கம், மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தீபமேற்றி, சனிபகவானை வழிபட்டனர். இதற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை செயல் அலுவலர் சிலம்பரசன் மற்றும் தொல்பொருள் துறை பணியாளர்கள், திருக்கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர்.

மேலும் செய்திகள்